டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த "கோடைகால செயல் திட்டம்": அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்
காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் செயல் திட்டம் வகுத்துள்ளதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் கோடை காலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் செயல் திட்டம் வகுத்துள்ளதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கட்டுமானத்திலிருந்து வெளிவரும் தூசியினால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த, 500 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான கட்டுமானங்கள் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பசுமைப் பரப்பை அதிகரிக்க 52 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 42 லட்சம் மரக்கன்றுகள் கோடை காலத்தில் நடப்பட்டு, 4 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்,'' என்றார்.
பயிர் கழிவு எரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் போன்றவற்றை கண்காணிக்க ரோந்து குழுக்கள் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு இடங்களில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் காற்று மாசு குறைந்து வருவதை நாடாளுமன்றமே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது டெல்லி மாநில மக்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பலன் என்றும் இதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். மேலும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அண்டை மாநிலங்களுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.