மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அடுத்தமாதம் நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு உத்தரவு
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அடுத்தமாதம் 16ம் தேதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி,
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இதனிடையே, வழக்கு விசாரணைக்கு ஆஜராக கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடும்படி டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி கோர்ட்டு, விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வழக்கு விசாரணைக்காக டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் காணொளி காட்சி மூலம் ஆஜரானார்.
டெல்லி சட்டசபையில் இன்று அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் நேரில் ஆஜராக முடியவில்லை என கெஜ்ரிவால் கோர்ட்டில் தெரிவித்தார்.
கெஜ்ரிவாலின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் (மார்ச் 16) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.