டெல்லி அவசர சட்ட மசோதா - எதிர்த்து வாக்களிக்க 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தீவிர ஏற்பாடு


டெல்லி அவசர சட்ட மசோதா - எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர ஏற்பாடு
x

உறுப்பினர்கள் அனைவரும் அன்றைய தினம் தவறாது அவைக்கு வர வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளன.

புதுடெல்லி,

டெல்லி அரசின் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்துக்கு மாற்றாக மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்ப்பதில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் உறுதியாக உள்ளன. எனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யும்போது தங்கள் அணியை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் மசோதாவை எதிர்த்து வாக்களிப்பதற்கு வசதியாக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

இதில் முக்கியமாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் உறுப்பினர்கள் அனைவரும் அன்றைய தினம் தவறாது அவைக்கு வர வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளன.

இதைத்தவிர இந்த கட்சிகளை சேர்ந்த மூத்த மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள எம்.பி.க்களையும் அன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு சுமார் 109 எம்.பி.க்கள் உள்ளனர். மேலும் கபில்சிபல் போன்ற ஓரிரு சுயேச்சைகளின் ஆதரவும் இந்த கூட்டணிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், அனைத்து எம்.பி.க்களும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டால் எதிர்க்கட்சிகளின் வியூகம் வெற்றிபெற 120 பேரின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story