பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 11 பேர் உடல் கருகி பலி
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள கடைகளுக்கும் வேகமாக பரவியது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியின் அலிபுர் தயால்பூர் மார்க்கெட்டில் பெயிண்ட் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக தொழிற்சாலையில் இருந்த ரசாயனப் பொருட்கள் வெடித்து சிதறின. இதனால் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள கடைகளுக்கும் வேகமாக பரவியது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 22-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ரசாயன பொருட்கள் வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் 11 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் முழுவதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம் என டெல்லி தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உள்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.