டெல்லி மந்திரிக்கு சிறையில் மசாஜ், வி.ஐ.பி. சலுகை: வீடியோ வெளியீடு
டெல்லியில் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்யும் வீடியோ வெளிவந்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் மந்திரியாக இருந்த சத்யேந்தர் ஜெயின் மீது பணமோசடி வழக்கு பதிவானது. இதனால், கடந்த மே மாதம் 30-ந்தேதி அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்தது.
இதனால், அவர் வகித்து வந்த இலாகாக்கள், சுகாதாரம், உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்டவை துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், டெல்லி அமைச்சரவையில் எந்த பொறுப்பும் இன்றி ஜெயின் மந்திரியாக நீடித்து வருகிறார்.
இந்த நிலையில், சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது என அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் புகார் அளித்தது.
சத்யேந்திர ஜெயின் அறைக்கு செல்ல அவரது மனைவி பூனம் ஜெயினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் அவர் குறிப்பிட்ட நேரத்திற்கும் கூடுதலாக அதிக நேரம் அங்கேயே இருக்கிறார். சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என அனைத்து வசதிகளும் ஜெயினுக்கு அளிக்கப்படுகிறது.
சத்யேந்திர ஜெயின் ஒரு மந்திரி என்றும், அதனை அவர் நியாயமற்ற முறையில் பயன்படுத்தி கொள்கிறார் என கூறியது. தவிர, டெல்லி மந்திரி சிறை அறையின் அனைத்து சி.சி.டி.வி. காட்சிகளையும் அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.
இந்த நிலையில், சிறையில் ஜெயின் மசாஜ் செய்து கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. சிறையில் வி.ஐ.பி. சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று ற குற்றச்சாட்டு கூறி, அவரை திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று, பா.ஜ.க. 2 நாட்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த வீடியோ வெளிவந்து உள்ளது.
டெல்லி அரசின் கீழ் வரும் டெல்லி சிறையில், ஜெயின் படுக்கையில் படுத்தபடி, காகிதங்களில் உள்ள தகவலை வாசித்தபடி காணப்படுகிறார். அவரருகே உள்ள நபர், ஜெயின் காலுக்கு மசாஜ் செய்கிறார்.
இதுபற்றி பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஜாத் பூனாவல்லா, ஜெயினுக்கு தலை முதல் கால் வரை முழு மசாஜ் செய்யும் மற்றொரு வீடியோவை வெளியிட்டு, 5 மாதங்களாக ஜாமீன் கிடைக்காத ஒரு நபருக்கு திகார் சிறை அறையில் மசாஜ்? ஆம் ஆத்மி அரசில் சிறையில் விதிமீறல்கள் என குறிப்பிட்டு உள்ளார்.
எப்படி அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. கெஜ்ரிவாலுக்கு நன்றிகள் என தெரிவித்து உள்ளார். 2 நாட்களுக்கு முன் கடந்த 17-ந்தேதி ரோஸ் அவென்யூ கோர்ட்டு, ஜெயினின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.