நாங்கள் பயங்கரவாதிகளா..? டெல்லி போலீசார் மோசமான அணுகுமுறை - காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகரிடம் புகார்


மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான குழுவினர் சந்தித்து புகார் அளித்தனர்.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மூன்று தினங்களாக தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி.க்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் 3-வது நாளாக அமைதி வழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே அமலாக்கத்துறை அலுவலகத்தை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதி மணி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது சென்றனர்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை போலீசார் தாக்கியதால் இடது விலா பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், காவலர்கள் தள்ளிவிட்டதில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, டெல்லி போலீசாரால் போராட்டம் நடத்திய கட்சி எம்.பி.க்கள் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.

சபாநாயகரிடம் புகார் அளித்துவிட்டு வந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது,

"எங்கள் எம்.பி.க்கள் அட்டூழியங்கள் மற்றும் வன்முறைகளுக்கு ஆளான விதம் குறித்து சபாநாயகரிடம் விரிவாக கூறினோம். சபாநாயகர் நாங்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்குள் புகுந்த டெல்லி போலீஸ் அதிகாரிகள், எங்கள் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களை முன்கூட்டியே திட்டமிட்ட முறையில் தாக்கினர். போலீஸ் ஸ்டேசனில் கூட, காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களை பயங்கரவாதிகள் போல கருதி டெல்லி போலீசார் மோசமாக நடந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மூன்று தினங்களாக தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து நாளை விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் அதை எதிர்க்கவில்லை. ஆனால், பழிவாங்கும் மற்றும் வன்முறை அரசியலைப் பயன்படுத்த வேண்டாம் என்று தான் நாங்கள் கூற விரும்புகிறோம்" என்று கூறினார்.

இதற்கிடையில், டெல்லி போலீஸ் தரப்பு இந்த புகார்களை மறுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டங்களுக்கு தேவையான அனுமதியை பெறவில்லை என்று குற்றம் சாட்டியது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, நாடு முழுவதும் கவர்னர் மாளிகைகளை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Next Story