ஷ்ரத்தா கொலை வழக்கு: கைதான அப்தாபுக்கு எதிராக 6,629 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்


ஷ்ரத்தா கொலை வழக்கு: கைதான அப்தாபுக்கு எதிராக 6,629 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
x

ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அப்தாபுக்கு எதிராக 6,629 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியர் ஷரத்தா கடந்த ஆண்டு மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக கூறப்படுகிறது. கொடூரமாக நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷரத்தாவை காணவில்லை என அவரது தந்தை புகார் அளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் போலீசார், டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், முக்கிய குற்றவாளியாக சந்தேகப்படும் அப்தாப் அமீனை அவரது வீட்டில் பிடித்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் 'பாலிகிராப்' சோதனை மற்றும் நார்கோ சோதனை நடத்தப்பட்டது. இதில் ஷரத்தாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், ஷ்ரத்தா கொலை வழக்கில் அப்தாப் ஆமின் பூனவல்லாவுக்கு எதிராக டெல்லி போலீசார் 6,629 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திபில் பேசிய டெல்லி காவல் இணை ஆணையர் மீனு சவுத்ரி, "ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக தோராயமாக 6 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். இதில், இந்த கொலை வழக்கு தொடர்பாக 150க்கும் மேற்பட்டவர்களிடம் பெற்ற அறிக்கையை இணைத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.


Next Story