சனாதனம் பற்றி சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு
‘சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்’ என்று கூறியதாக தெரிகிறது.
புதுடெல்லி,
சென்னை தேனாம்பேட்டையில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்' என்று கூறியதாக தெரிகிறது.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனை பார்த்த டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகரும், சுப்ரீம் கோர்ட்டு வக்கீலுமான வினித் ஜிந்தால் டெல்லி போலீசில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்தார். இந்து மக்களின் மத உணர்வுகளை உதயநிதி ஸ்டாலின் புண்படுத்தி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120 பி, 153 ஏ, 295 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி வக்கீல் வினித் ஜிந்தால் தனது எக்ஸ் தளத்தில் அதுகுறித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில் உதயநிதி பேசிய வீடியோவும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.