டெல்லி: போலீசார் சீருடையில் மூதாட்டிகளிடம் நகை கொள்ளை; ஈரானிய கும்பல் கைது


டெல்லி:  போலீசார் சீருடையில் மூதாட்டிகளிடம் நகை கொள்ளை; ஈரானிய கும்பல் கைது
x
தினத்தந்தி 25 Dec 2022 4:54 AM GMT (Updated: 25 Dec 2022 5:28 AM GMT)

டெல்லியில் போலீசார் சீருடையில் மூதாட்டிகளிடம் விலையுயர்ந்த நகைகளை கொள்ளையடித்த ஈரான் நாட்டு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.


புதுடெல்லி,


டெல்லி துவாரகா நகர துணை காவல் ஆணையாளர் ஹர்ச வர்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, துவாரகாவின் 18, 12 மற்றும் 4 ஆகிய பிரிவுகளில் பல்வேறு புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன.

அதில் மூதாட்டிகள், போலீசார் சீருடையில் வந்த 4 பேர் தங்களிடம் நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றவாளிகள் முதலில், டெல்லியில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன என்பன போன்று பேச தொடங்குகின்றனர். பின்பு எதிர்தரப்பினரின் நம்பிக்கையை பெற்று விடுகின்றனர்.

அதன்பின்னர் விலையுயர்ந்த நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர் என புகாரில் தெரிவித்து உள்ளனர் என கூறியுள்ளார்.

இதுபற்றி நடந்த விசாரணையில் ஈரான் நாட்டு கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அந்த கும்பலின் முக்கிய புள்ளியான நொய்டாவை சேர்ந்த சிக்கந்தர் அலி என்ற சாஜித் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையின் பிவாண்டி பகுதியில் இரானி காலனியை சேர்ந்த சாஜித் மோசடி, கொள்ளை என 21 வழக்குகளில் தொடர்புடையவர். இவருடைய கூட்டாளியான அக்பர் அலி என்ற கபீர் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 11 வழக்குகள் உள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story