இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Nov 2025 8:11 PM IST
சட்டம் ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசை கண்டித்து 14ம் தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களை பல்வேறு வகைகளில் பாதுகாக்கும் மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செயல்படுகின்றனர். இந்த திமுக ஆட்சி தமிழ் நாட்டை அலங்கோல நிலைக்கு தள்ளிவிட்டதன் அடையாளம் தான் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- 11 Nov 2025 8:09 PM IST
இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கல் தென்காசி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 11 Nov 2025 8:06 PM IST
பீகார் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் 68.52 சதவீதம் வாக்குப்பதிவு; சராசரி 66.80 சதவீதம்
தொடர்ந்து 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பீகாரில் 6 மணியளவில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த சூழலில், பீகார் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் 68.52 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.
இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் சராசரியாக 66.80 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்காளர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பு என்ற பரபரப்புக்கு இடையே அதிக அளவு வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, வாக்குப்பதிவு சற்று அதிகம் என கூறப்படுகிறது.
- 11 Nov 2025 7:29 PM IST
முதல் ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு 300 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் பகர் ஜமான் 32 ரன்களும், சைம் அயுப் 6 ரன்களும் , பாபர் அசாம் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சல்மான் ஆகா , ஹுசைன் தலத் மட்டும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய சல்மான் ஆகா சதமடித்து அசத்தினார்.
ஹுசைன் தலத் அரைசதமடித்தார். முகமது நவாஸ் 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 299 ரன்கள் எடுத்தது. இலங்கை சார்பில் ஹஸரங்கா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- 11 Nov 2025 6:52 PM IST
பீகார் சட்டசபை தேர்தல்; வெற்றி பெறுவது யார்? கருத்துக்கணிப்பு விவரம் வெளியீடு
2-வது கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடந்தது. இதில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. டோக்கன் பெற்ற வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குகள் உள்பட இறுதி வாக்கு பதிவு நிலவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், வெற்றி பெறும் கட்சிகளின் நிலவரம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். எனினும், 14-ந்தேதி வெளிவரும் முடிவே இறுதியானது. 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்.
- 11 Nov 2025 6:21 PM IST
அல்லரி நரேஷ்-காமக்சி நடித்த திகில் படம்...டிரெய்லர் வெளியானது
நகைச்சுவை வேடங்களுக்குப் பெயர் பெற்ற நடிகர் அல்லரி நரேஷ் நடித்த திகில் படம் 12எ(12A) ரெயில்வே காலனி. இந்தப் படத்தை நானி காசர்கட்டா இயக்கி அறிமுகமாகிறார்.
இப்படத்தில் காமக்சி பாஸ்கர்லா, சாய் குமார், விவா ஹர்ஷா, கெட்அப் ஸ்ரீனு, சதாம், ஜீவன் குமார், ககன் விஹாரி, அனிஷ் குருவில்லா, மதுமணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்த 12எ(12A) ரெயில்வே காலனி படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற 21-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
- 11 Nov 2025 6:05 PM IST
எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம்: மறுசீரமைக்கும் பணி; கனிமொழி எம்.பி., ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் - எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் முதல் தளம் மழையால் பாதிக்கப்பட்டுச் சேதமடைந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால் எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் ஆய்வு செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின்படி, ரூ.1.53கோடி மதிப்பீட்டில் மகாகவி பாரதியார் இல்லம் பழைமை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் நடைபெறும் மறுசீரமைக்கும் பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- 11 Nov 2025 6:01 PM IST
சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை - மகளிர் ஆணையம் பரிந்துரை
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது. பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக 2 முறை சம்மன் அனுப்பியும் சி.வி.சண்முகம் ஆஜராகாத நிலையில் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- 11 Nov 2025 6:00 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை மறுநாள் (13.11.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மாங்காடு: ஆவடி சாலை, மகிழம் அவன்யூ, பூஞ்சோலை வீதி, எம்எஸ்எஸ் நகர், அட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகபிள்ளை நகர், கங்கை அம்மன் கோயில், விநாயகா நகர், கோரிமேடு, பஜார் தெரு, கன்னம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோயில் தெரு, குன்றத்தூர் சாலை.
மாத்தூர்: எம்எம்டிஏ 1 முதல் 3வது பிரதான சாலை வரை, இந்தியன் வங்கி, டிஎன்எச்பி லேக்விவ் குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 11 Nov 2025 5:49 PM IST
போக்குவரத்து சிக்னல்கள் இல்லை
இந்தியாவின் முதல் போக்குவரத்து சிக்னல் இல்லாத நகரமாக ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரம் மாறியுள்ளது. இந்த நகரில் சுரங்கப்பாதைகள், ரிங் ரோடுகள் மற்றும் மேம்பாலங்கள் முழுவதும் சீரான இணைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் மையமாக கோட்டா விளங்கிவருகிறது
















