சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நேரில் ஆஜராக டி.கே.சிவக்குமாருக்கு, டெல்லி சிறப்பு கோர்ட்டு நோட்டீசு


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நேரில் ஆஜராக டி.கே.சிவக்குமாருக்கு, டெல்லி சிறப்பு கோர்ட்டு நோட்டீசு
x

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக டி.கே.சிவக்குமாருக்கு, டெல்லி மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

பெங்களூரு:

வருமானவரி சோதனை

கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார் எம்.எல்.ஏ.. இவர் முன்னாள் மந்திரியும் ஆவார். இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள வீடு, அலுவலகங்கள் மற்றும் டெல்லியில்

உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமான வரித்துறைஅதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ரூ.143 கோடிக்கு சட்டவிரோதமாக டி.கே.சிவக்குமார் சொத்து சேர்த்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. மேலும் டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.8 கோடியே 59 லட்சம் சிக்கி இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததுடன், டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.

48 நாட்கள் சிறைவாசம்

அதைத்தொடர்ந்து, இவ்வழக்கு வருமான வரித்துறையில் இருந்து அமலாக்கத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். 48 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதற்கிடையே டி.கே.சிவக்குமாா் தனது மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினர் பெயரிலான 317 வங்கி கணக்குகள் மூலமாக பல கோடி ரூபாயை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்திருப்பதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.

விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு

இந்த நிலையில் டெல்லியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் டி.கே.சிவக்குமார், அவரது ஆதரவாளர்கள் சச்சின் நாராயண், சுனில்குமார் சர்மா, ஆஞ்சநேயா, ராஜேந்திரா மீது கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் டெல்லி மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேருக்கும் நேற்று கோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.


Next Story