மிகவும் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியல்... டெல்லி மீண்டும் முதலிடம்


மிகவும் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியல்... டெல்லி மீண்டும் முதலிடம்
x

மாசுபட்ட நாடுகளின் தரவரிசையில் வங்காளதேசம் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.

புதுடெல்லி:

சுவிட்சர்லாந்தச் சேர்ந்த காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.க்யு.ஏர், உலகம் முழுவதும் காற்றின் தரம் குறித்த அளவீடுகளுடன் புள்ளிவிவர பட்டியலை வெளியிடுகிறது. அவ்வகையில் 2023-ம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 134 நாடுகளில் ஆய்வு நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. மிகவும் மோசமான காற்றின் தரத்தை கொண்டுள்ள தலைநகரமாக டெல்லி நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை ஏற்படுத்தும் பிஎம்2.5 துகள்களின் செறிவு 2022-ல் ஒரு கன மீட்டருக்கு 89.1 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்தது. அது, 2023-ல் 92.7 மைக்ரோகிராமாக மோசமடைந்துள்ளது.

இதேபோல் காற்று மாசு மிகவும் மோசமான பெருநகரங்களில் பீகார் மாநிலம் பெகுசராய் நகரம் முதலிடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் பி.எம்.2.5 துகள்களின் செறிவு ஒரு கனமீட்டருக்கு 118.9 மைக்ரோகிராமாக உள்ளது. 2022ம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்த நகரம் இடம்பெறாத நிலையில், 2023-ல் மிகவும் மோசமடைந்துள்ளது.

மாசுபட்ட நாடுகளின் தரவரிசையைப் பொருத்தவரை இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சராசரியாக பிஎம்2.5 துகள்களின் செறிவு ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் என்ற அளவில் உள்ளது. 2022-ம் ஆண்டு 53.3 மைக்ரோகிராம் என்ற அளவுடன் 8வது இடத்தில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு மேலும் மோசமடைந்துள்ளது.

இந்த பட்டியலில் வங்காளதேசம் முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் சராசரி பிஎம்2.5 துகள் செறிவு ஒரு கனமீட்டருக்கு 79.9 மைக்ரோகிராமாக பதிவாகியிருந்தது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் (ஒரு கனமீட்டருக்கு 73.7 மைக்ரோகிராம்) உள்ளது.

காற்று மாசுபாடு மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சராசரி ஆயுட்காலத்திற்கு முன்னதாக மரணிக்கும் 7 மில்லியன் நபர்களின் மரணங்களுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பது குறிப்பிடத்தக்ககது.


Next Story