நொய்டாவில் பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது


நொய்டாவில் பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது
x

நொய்டாவில் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய சென்ற இளைஞர், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது.

நொய்டா,

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கூட அது பெரியளவில் குறையவில்லை.

இந்தநிலையில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கும் பெண், மொபைல் செயலி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். 23 வயதான சுமித் சிங் என்ற இளைஞர் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய வந்துள்ளார். மளிகை பொருட்களைக் கொடுக்கும் போது அந்த பெண் வீட்டில் தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்டார். இதையடுத்து வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்த அந்த டெலிவரி இளைஞர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இந்த சம்பவம் கடந்த 27-ம் தேதி நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். பலாத்காரம் செய்த நபர் யார் என்பது தெரிய வந்த நிலையில், அவரை பிடிக்க போலீசார் பல்வேறு சிறப்புக் குழுக்களை அமைத்தனர்.

சுமித் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்த போலீசார், அவரை பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது போலீசார் அசந்த நேரம் பார்த்து சுமித் கான்ஸ்டபிள் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்துள்ளார். பிறகு போலீசை மிரட்டியவாறே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அப்பகுதியில்தான் அவர் மறைந்து இருக்கிறார் என்பதை உறுதி செய்த போலீசார், அவரை பிடிக்க ஸ்வாட் குழுவை உதவிக்கு அழைத்துள்ளனர்.

அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார், அவரை நெருங்கியுள்ளனர். அப்போது அவர் போலீசாரை நோக்கிச் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும் தற்காப்பிற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த நபருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story