6 மாடி கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி கட்டிய மூன்று மாடிகள் இடிப்பு


6 மாடி கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி கட்டிய மூன்று மாடிகள் இடிப்பு
x

கட்டிடம் இடிக்கப்பட்டபோது எடுத்தபடம்.

ஆனேக்கல் அருகே தொம்மசந்திராவில் விதிமுறைகளை மீறி கட்டிய 6 மாடி கட்டிடத்தில் 3 மாடிகள் இடிக்கப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் தாசில்தார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

பெங்களூரு:

ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா அருகே தொம்மசந்திராவை சேர்ந்தவர் லத்தீப். இவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், ஆனேக்கல் பகுதியில் 3 மாடிக்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தொம்மசந்திராவை சேர்ந்த முனிரெட்டி என்பவர், விதிமுறைகளை மீறி 6 மாடி கட்டிடம் கட்டி வருகிறார். இதனால் அக்கம்பக்கத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆனேக்கல் பகுதியில் 3 மாடிக்கு மேல் கட்டிடங்கள் கட்ட அனுமதி இல்லை. இதனால் அந்த கட்டிடத்தில் 3 மாடிகளை இடித்து அகற்ற வேண்டும் என்று ஆனேக்கல் தாசில்தாருக்கு நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

3 மாடி கட்டிடம் இடிப்பு

அதன்பேரில் ஆனேக்கல் தாசில்தார், 6 மாடி கட்டிடத்தில் 3 மாடிகளை இடிக்கும்படி கட்டிட உரிமையாளர் முனிரெட்டிக்கு நோட்டீசு அனுப்பினார். ஆனால், அந்த நோட்டீசுக்கு முனிரெட்டி எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து ஆனேக்கல் தாசில்தார், போலீசாருடன் தொம்மசந்திராவுக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் 6 மாடி கட்டிடத்தில் 3 மாடியை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு கட்டிட உரிமையாளர் முனிரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் கோர்ட்டு உத்தரவுபடி இடிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஊழியர்கள் 3 மாடியை இடிக்கும் பணி நடந்தது. நவீன எந்திரத்தின் உதவியுடன் 6 மாடி கட்டிடத்தில் இருந்து 3 மாடி இடித்து அகற்றப்பட்டது.

ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் 3 மாடிகள் இடித்து அகற்றப்பட்டது அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


Next Story