கடுமையான பனி மூட்டம்: வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்


கடுமையான பனி மூட்டம்:  வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்
x
தினத்தந்தி 14 Jan 2024 4:52 AM GMT (Updated: 14 Jan 2024 4:56 AM GMT)

வட மாநிலங்களில் பனி மூட்டத்துடன் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பனிமூட்டம் காரணமாக ரெயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் நடுங்கி வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் காலை வேளையில் வெப்ப நிலை 3.6 டிகிரி செல்சியசுக்கும் கீழ் செல்வதால் கடுமையான குளிர் காணப்படுகிறது.

கடுமையான பனி மற்றும் குளிர் காரணமாக வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:- இமாச்சல பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் ஒரு சில இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் கடுமையான பனி மூட்டம் நிலவும். பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குளிர் அதிகமாக காணப்படும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கடும் பனி மூட்டத்தால் 50 மீட்டருக்கும் குறைவாக உள்ள தொலைவு மட்டுமே கண்ணுக்கு புலப்பட்டால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 50- 200 மீட்டர் வரை தெரிந்தால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. கடுமையான பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் ரெயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.


Next Story