வேதங்களில் உள்ள வானியல் சூத்திரங்களை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க விருப்பம்: பிரதமர் மோடி பேச்சு


வேதங்களில் உள்ள வானியல் சூத்திரங்களை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க விருப்பம்: பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா கனவு நனவாகும் என்றும், இந்திய வேதங்களில் உள்ள வானில் சூத்திரங்களை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க விரும்புவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

பெங்களூரு:

பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று உங்கள் அனைவரின் மத்தியிலும் நான் வித்தியாசமான மகிழ்ச்சியை உணர்கிறேன். இத்தகைய மகிழ்ச்சி மிகவும் அரிதான சந்தர்ப்பத்தில் நடக்கும். உடலும், மனமும் மகிழ்ச்சியால் நிரம்பி வழியும் போது, ஒருவனின் வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்கள் பல சமயங்களில் நிகழும். அப்போது நம்மை பொறுமையின்மை ஆட்கொள்ளும். இந்த முறை எனக்கும் அதே போன்ற விஷயம் நடந்தது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய போது, நான் தென்ஆப்பிரிக்காவில் இருந்தேன். ஆனால் என் மனம் முழுவதும் உங்கள் மீது தான் இருந்தது.

நான் உங்களை வணங்க விரும்புகிறேன். நீங்கள் அதிகமாக உழைத்துள்ளீர்கள். நான் இந்தியா வந்தவுடன் உங்களை முதலில் பார்க்க விரும்பினேன். உங்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்த விரும்பினேன். உங்கள் கடின உழைப்புக்கு வணக்கம், உங்கள் பொறுமைக்கு வணக்கம், உங்கள் ஆர்வத்திற்கு வணக்கம், உங்கள் உயிர்ச்சக்திக்கு வணக்கம். நாட்டை நீங்கள் கொண்டு சென்ற உயரம், சாதாரண வெற்றியல்ல. இது எல்லையற்ற விண்வெளியில் இந்தியாவின் அறிவியல் ஆற்றலின் சக்தி.

நிலவின் மேற்பரப்பைத் தொட்ட உலகின் நான்காவது நாடாக இன்று இந்தியா மாறியுள்ளது. இந்தியா எங்கிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது என்பதைப் பார்க்கும்போது இந்த வெற்றி இன்னும் பெரிதாகிறது. இந்தியாவில் தேவையான தொழில்நுட்பம் இல்லாத ஒரு காலம் இருந்தது, ஒத்துழைப்பும் இல்லை.

இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார பலமிக்க நாடாக மாறியுள்ளது. இன்று, வர்த்தகம் முதல் தொழில்நுட்பம் வரை, முதல் வரிசையில் நிற்கும் நாடுகளில் இந்தியா கணக்கிடப்படுகிறது. அதாவது, 'மூன்றாவது வரிசையில்' இருந்து 'முதல் வரிசை' வரையிலான இந்தப் பயணத்தில், நமது இஸ்ரோ போன்ற நிறுவனங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. இன்று நீங்கள் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை நிலவுக்கு எடுத்து சென்றுள்ளீர்கள்.

இன்று, இந்தியாவின் இளம் தலைமுறையினர் அறிவியல், விண்வெளி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பதை நான் பார்க்கும்போது, நமது விண்வெளிப் பயணங்களின் வெற்றி அதன் பின்னணியில் உள்ளது. மங்கள்யானின் வெற்றி, சந்திரயான் வெற்றி, ககன்யான் திட்டம் ஆகியவை நமது நாட்டின் இளம் தலைமுறையினருக்கு புதிய மனநிலையை அளித்துள்ளது. இன்று இந்தியாவின் சிறு குழந்தைகளின் உதடுகளில் கூட சந்திரயான் என்ற பெயர் ஒலிக்கிறது. இன்று இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையும் தனது எதிர்காலத்தை விஞ்ஞானிகளாகிய உங்களிடத்தில் பார்க்கிறார்கள்.

உங்களின் சாதனை இந்தியாவின் ஒட்டுமொத்த தலைமுறையையும் தட்டி எழுப்பி, புதிய ஆற்றலை கொடுப்பதாகும். இனிமேல், எந்த குழந்தையும், இரவில் நிலவை பார்க்கும்போது, என் நாடு நிலவை அடைந்த தைரியம், தனக்குள்ளும் இருப்பதாக நம்பும். இன்று நீங்கள் இந்திய குழந்தைகளிடம் விதைத்த லட்சியங்களின் விதைகள், நாளை அவை ஆலமரங்களாக மாறி, வளர்ந்த இந்தியாவின் அடித்தளமாக மாறும்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் உணர்வை எப்போதும் நம்மை ஊக்குவிக்கும். செயற்கைக்கோள்களை ஏவுவதை விட அல்லது விண்வெளியை ஆராய்வதை விட விண்வெளித் துறையின் திறன் மிக அதிகம் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

இன்று, நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு கல்வி, தகவல் தொடர்பு மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதில் விண்வெளித் துறை பெரும் பங்கு வகிக்கிறது. விண்வெளி தொழில்நுட்பம் இல்லாமல், தொலை மருத்துவம் மற்றும் தொலைநிலை கல்வியை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. நாட்டின் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு விண்வெளி அறிவியல் பெரிதும் உதவியுள்ளது. நமது நாட்டின் விவசாய துறைக்கு வலுவூட்டுவதற்கும், வானிலையை முன்கூட்டியே அறிவிப்பதற்கும் விண்வெளித் துறை உதவுகிறது.

ஒரு சூறாவளி வந்தால், நமது செயற்கைக்கோள்கள் அதன் முழு வழியையும் கூறுகின்றன. மேலும் மக்களின் உயிரும் காப்பாற்றப்படுகிறது, சொத்துக்களும் காப்பாற்றப்படுகின்றன. மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து 'ஆளுமையில் விண்வெளித் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் இஸ்ரோ தேசிய 'ஹேக்கத்தான்' ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். அதிகபட்ச இளைஞர்கள், அதிகபட்ச இளைஞர் சக்தி இந்த ஹேக்கத்தானில் பங்கேற்க வேண்டும். இந்த தேசிய ஹேக்கத்தான் நமது நிர்வாகத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றும் மற்றும் நாட்டு மக்களுக்கு நவீன தீர்வுகளை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்திய வேதங்களில் உள்ள வானியல் சூத்திரங்களை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க விரும்புகிறேன். அவற்றை புதிதாகப் படிக்க புதிய தலைமுறையினர் முன்வந்துள்ளனர். இது நமது பாரம்பரியத்திற்கும் முக்கியமானது மற்றும் அறிவியலுக்கும் முக்கியமானது. இன்று பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று இருப்பவர்களுக்கு ஒரு வகையில் இது இரட்டைப் பொறுப்பு. இந்தியாவிடம் இருந்த அறிவியல் அறிவு பொக்கிஷம், நீண்ட கால அடிமைத்தனத்தில் புதைந்து, மறைக்கப்பட்டுள்ளது.

இந்த பொக்கிஷத்தையும் ஆராய்ந்து, ஆராய்ச்சி செய்து அதை உலகுக்கு சொல்ல வேண்டும். 2-வது பொறுப்பு, இன்றைய நவீன அறிவியலுக்கும், தொழில்நுட்பத்துக்கும், கடலின் ஆழத்திலிருந்து ஆகாய உயரம் வரை நமது இளம் தலைமுறையினர் புதிய பரிமாணங்களைக் கொடுக்க வேண்டும். வானத்தின் உயரத்திலிருந்து விண்வெளியின் ஆழம் வரை, நீங்கள் பணியாற்ற நிறைய இருக்கிறது. நீங்கள் ஆழமான கடலையும் ஆராயுங்கள். நீங்கள் அடுத்த தலைமுறை கணினியை உருவாக்குகிறீர்கள், இந்தியாவில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தொடர்ந்து திறக்கப்படுகின்றன.

இன்று, பெரிய வல்லுநர்கள் அடுத்த சில ஆண்டுகளில், இந்தியாவின் விண்வெளித் தொழில் 8 பில்லியன் டாலர்களிலிருந்து (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) 16 பில்லியன் டாலர்களாக உயரும் என்று கூறுகிறார்கள். இதன் தீவிரத்தை உணர்ந்து, விண்வெளித் துறையிலும் அரசு தொடர்ந்து சீர்திருத்தம் செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் பணிபுரியும் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 4-ல் இருந்து 150 ஆக அதிகரித்துள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

உங்கள் வழிகாட்டுதல் நாட்டின் எதிர்கால தலைமுறைக்கு மிகவும் அவசியம். நீங்கள் பல முக்கியமான பணிகளில் பணியாற்றி வருகிறீர்கள். அவர்கள் அனைவருக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி. உங்கள் ஆராய்ச்சி மற்றும் பல வருட தவம் மற்றும் கடின உழைப்பு வெற்றியை நிரூபித்துள்ளது. நாட்டு மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நம்பிக்கையை சம்பாதிப்பது என்பது சிறிய விஷயம் அல்ல. நாட்டு மக்களின் ஆசிகள் உங்கள் மீது உள்ளது. இந்த ஆசீர்வாதத்தின் சக்தியுடன், நாட்டிற்கான இந்த அர்ப்பணிப்புடன், இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவராக மாறும்.

மேலும் நான் உங்களுக்கு மிகுந்த நம்பிக்கையுடன் சொல்கிறேன். 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும். நாட்டு மக்கள் பெருமை மிக்கவர்கள். கனவுகள் விரைவாக தீர்மானங்களாக மாறுகின்றன, மேலும் உங்கள் கடின உழைப்பு அந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு ஒரு சிறந்த உந்துதலாக மாறுகிறது. நான் உங்களை எவ்வளவு அதிகமாக வாழ்த்தினாலும் அது குறைவு தான். கோடிக்கணக்கான நாட்டு மக்கள் சார்பிலும், உலகெங்கிலும் உள்ள அறிவியல் சமூகத்தின் சார்பிலும், எனது சார்பிலும் நன்றிகள், வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story