'தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும்' - இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனைத்து விவரங்களையும் எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
புதுடெல்லி,
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி, தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி நேற்று வழங்கியது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்து எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மார்ச் 12-ந்தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் எஸ்.பி.ஐ. வங்கி உரிய நேரத்தில் வழங்கியுள்ளது. நான் டெல்லிக்கு சென்று தரவுகளை பார்வையிடுவேன். பின்னர் சரியான நேரத்தில் அனைத்து விவரங்களையும் வெளியிடுவோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.