'நீங்கள் பிரதமராவதை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளுமா?' - மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேவேகவுடா கேள்வி


நீங்கள் பிரதமராவதை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளுமா? - மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேவேகவுடா கேள்வி
x

காங்கிரஸ் கட்சியைப் பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என தேவேகவுடா குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பங்கேற்றார். அப்போது, வாழ்நாளின் இறுதியில் தேவேகவுடா தனது அரசியல் போக்கை மாற்றிக்கொண்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்துக்கு தேவேகவுடா பதிலளித்தார்.

அப்போது அவர், தனது ஜனதா தளம்(எஸ்) கட்சியை அழிக்க நினைத்த சில காங்கிரஸ்காரர்களிடம் இருந்து கட்சியை காப்பதற்காகவே பா.ஜ.க.விற்கு ஆதரவளித்ததாக தேவேகவுடா கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது;-

"கர்நாடக முதல்-மந்திரியாக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்க வேண்டும் என்று நான் கூறியபோது, எனது மகன் குமாரசாமியை முதல்-மந்திரியாக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியது. ஆனால் 13 மாதங்களுக்குள் குமாரசாமியை நீக்கியது யார்? கார்கே அல்ல காங்கிரஸ் தலைவர்கள்.

என் மகன் காங்கிரஸால் நீக்கப்பட்ட போதுதான், நான் என் மகனை பா.ஜ.க.வுடன் இணையுமாறு வலியுறுத்தினேன். இந்த காங்கிரஸ் கட்சி உன்னை வளர அனுமதிக்காது என்று என் மகனிடம் கூறினேன்.

மல்லிகார்ஜுன கார்கே அவர்களே, நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக விரும்புகிறீர்களா? அதை காங்கிரஸ் கட்சி பொறுத்துக்கொள்ளுமா? எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பற்றி நன்றாகத் தெரியும்.

சுமார் 35-40 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ள தூய்மையான மனிதர் மல்லிகார்ஜுன கார்கே. ஆனால் பிரதமர் வேட்பாளருக்காக அவரது பெயரைக் குறிப்பிட்டபோது என்ன நடந்தது? அவரது சொந்த நண்பர்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ்காரர்கள் சிலர் எனது கட்சியை அழிக்க நினைத்தபோது, கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எனது ஆதரவை பா.ஜ.க.வுக்கு வழங்க முடிவு செய்தேன். அது ஒன்றே காரணம். தனிப்பட்ட நலனுக்காக நான் அப்படி செய்யவில்லை. இதற்கு பலனாக பிரதமர் நரேந்திர மோடி காட்டிய அன்பும், பாசமும்தான் எனக்கு கிடைத்துள்ளது."

இவ்வாறு தேவேகவுடா தெரிவித்தார்.


Next Story