அஞ்சனாத்திரி மலையில் அடுத்த மாதம் வளர்ச்சி பணிகள் தொடங்கும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


அஞ்சனாத்திரி மலையில் அடுத்த மாதம் வளர்ச்சி பணிகள் தொடங்கும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

பெங்களூருவில் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை நடந்தது.

அஞ்சனாத்திரி மலையில் வளர்ச்சி பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பசவராஜ் பொம்மை ஆலோசனை

கொப்பல் மாவட்டம் அஞ்சனாத்திரி மலையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, அதிகாரிகள் மற்றும் கொப்பல் மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அஞ்சனாத்திரி மலையில் அடுத்த மாதம் (ஜூலை) முதல் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்குவது என்றும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

அதிகாரிகளுக்கு உத்தரவு

கொப்பல் மாவட்டம் கங்காவதியில் உள்ள அஞ்சனாத்திரி மலையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அடுத்த மாதம்(ஜூலை) முதல் அஞ்சனாத்திரி மலையில் வளர்ச்சி பணிகள் தொடங்க உள்ளது. முதற்கட்டாக அஞ்சனாத்திரி மலைக்கு செல்வதற்காக சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. கங்காவதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலும் சாலை அமைக்கப்பட உள்ளது. மலையின் கீழ் பகுதியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது.

அஞ்சனாத்திரி மலைக்கு செல்ல 430 மீட்டருக்கு ரோப் கார் சேவையும் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான டெண்டர் இன்னும் 2 மாதங்களுக்குள் நிறைவு பெற உள்ளது. அஞ்சனாத்திரி மலையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள 60 ஏக்கர் நிலம் தேவையாக உள்ளது. இதற்கான 58 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட உள்ளது. விவசாயிகளின் அனுமதியை பெற்றும், கர்நாடக தொழில் வளர்ச்சி கழகம் மூலமாகவும் நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி நானே அஞ்சனாத்திரி மலைக்கு சென்று பார்வையிட உள்ளேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story