ராமசந்திர மூர்த்தி கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி
ஆண்டர்சன்பேட்டையில் சாலை விரிவாக்க பணிகள் தாமதமாக நடப்பதால் ராமசந்திர மூர்த்தி கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனா்.
கோலார் தங்கவயல்
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை சல்டானா சர்க்கிளில் இருந்து ஆண்டர்சன்பேட்டை வழியாக ரோட்ஜஸ்கேம் வரை சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் சல்டானா சர்க்கிளில் இருந்து ஆண்டர்சன்பேட்டை சர்க்கிள் வரை சாலை விரிவாக்கப்பணி நிறைவடைந்துள்ளது. ஆனால், ஆண்டர்சன்பேட்டை சர்க்கிளில் இருந்து ரோட்ஜஸ்கேம் சர்க்கிள் வரை சாலை விரிவாக்கத்திற்காக கால்வாய்கள் அகற்றும் பணி மற்றும் கட்டிடங்கள் இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் இதுவரை சாலை விரிவாக்க பணி தொடங்கவில்லை. ஆண்டர்சன்பேட்டை பி.எம். சாலை பிரசித்தி பெற்ற ராமச்சந்திர மூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவில் எதிரே கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மேலும் கோவில் அருகே கழிவுநீர் கால்வாயும் இடிக்கப்பட்டது.
தற்போது சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்படாததால், கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் கழிவுநீரும் அங்கு தேங்கி கிடப்பதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது.
கோவில் முன்பு வரை பள்ளம் கிடப்பதால் பக்தர்கள் தவறி விழவும் வாய்ப்பு உள்ளது. இதனால் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.