50 சதவீத விமானங்களையே இயக்க வேண்டும்: 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனத்துக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு


50 சதவீத விமானங்களையே இயக்க வேண்டும்: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு
x

Image Courtacy: AFP

50 சதவீத விமானங்களையே இயக்க வேண்டும் என்று ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

புதுடெல்லி,

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப கோளாறு பிரச்சினைகளில் சிக்கியிருந்தன. குறிப்பாக கடந்த ஜூன் 19-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 8 சம்பவங்கள் அவ்வாறு நிகழ்ந்து, பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது.

எனவே மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.), ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அந்த நிறுவனமும் விளக்கம் அளித்திருந்தது.

இதைத்தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை டி.ஜி.சி.ஏ. நேற்று விதித்தது. அதன்படி அடுத்த 8 வாரங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விமானங்களில் 50 சதவீதம் மட்டுமே இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த காலத்தில் டி.ஜி.சி.ஏ.வின் மேம்பட்ட கண்காணிப்புக்கு இந்த நிறுவனத்தின் விமானங்கள் உட்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அக்டோபர் 29-ந்தேதி வரையிலான நடப்பு கோடை கால அட்டவணைப்படி 4,192 வாராந்திர உள்நாட்டு விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் அனுமதி வாங்கியிருந்தது. தற்போது டி.ஜி.சி.ஏ. உத்தரவின்படி, 2,096 விமானங்களை மட்டுமே இயக்க முடியும் என கூறப்படுகிறது.


Next Story