ஏழை சிறுமிகளுக்காகவே இலவச நாப்கின் கேட்டோம்: பீகார் பள்ளி மாணவி பேட்டி
பலர் சேரிப் பகுதிகளில் வாழ்கிறார்கள், அவர்களால் நாப்கின்கள் வாங்க முடியாது என்று மாணவி கூறினார்.
பாட்னா,
பீகாரில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவரிடம் மாணவிகள் பேசிய உரையாடல் அடங்கிய வீடியோ வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இருதினங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாணவியர், "எங்களுக்கு இலவச நாப்கின்களை அரசு வழங்க வேண்டும். அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது.அதனால், ரூ.20 முதல் ரூ.30 விலையுள்ள நாப்கின்களை எங்களுக்கு அவர்கள் வழங்க முடியாதா?" என்று கேட்டனர்.
இதற்கு அதிகாரி ஹர்ஜோத் கவுர், "இந்த கோரிக்கைகளுக்கு ஏதேனும் முடிவு உண்டா? நாளைக்கு நீங்கள், அரசு ஜீன்ஸ் துணிகளை வழங்கலாம். அழகிய காலணிகளை வழங்கலாம் என கூறுவீர்கள்.
முடிவில், குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது, உங்களுக்கு இலவச காண்டம்கள் கூட வேண்டும் என கூறுவீர்கள்" இவ்வாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் தொடர்ந்து பேசிய காட்சிகள் வெளிவந்துள்ளன.
அந்த வீடியோவில், ஐ.ஏ.எஸ் அதிகாரி கவுரை நோக்கி பேசிய மாணவி ஒருவர் அதன்பின்னர் கூறியிருப்பதாவது:-
"எனது கேள்வி தவறாக இல்லை. நாப்கின்கள் பெரிய விஷயம் இல்லை; என்னால் அதை வாங்க முடியும்.ஆனால், பலர் சேரிப் பகுதிகளில் வாழ்கிறார்கள் மற்றும் அவர்களால் நாப்கின்கள் வாங்க முடியாது.
நான் எனக்காக மட்டுமல்ல, எல்லா பெண்களுக்காகவும் கேள்வி கேட்டேன். நாங்கள் அங்கு எங்கள் கவலைகளை தெரிவிக்கவே சென்றோம், சண்டையிட செல்லவில்லை" என்றார்.
இதன்பின்பு கவுர் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், "எனது வார்த்தைகள் எந்த பெண்ணின் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் யாரையும் அவமானப்படுத்தவோ, யாருடைய மனதையும் புண்படுத்தவோ விரும்பவில்லை" என தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியதாவது, "இந்த பிரச்சினை குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.