பாதுகாப்பு படையினருக்கு குறிவைத்து மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்த 5 சக்தி வாய்ந்த குண்டுகள் கண்டுபிடிப்பு..!


பாதுகாப்பு படையினருக்கு குறிவைத்து மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்த 5 சக்தி வாய்ந்த குண்டுகள் கண்டுபிடிப்பு..!
x

ஜார்கண்டில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்த 5 சக்தி வாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

சாய்பசா

ஜார்கண்டில் இந்த ஆண்டில் 10 வயது சிறுவன், 2 பெண்கள் உள்பட 10 பொதுமக்கள், மாவோயிஸ்டு பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியாகி உள்ளனர். மேலும் ஆயுதப்படை வீரர்கள் உள்பட 20 பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து கடந்த ஜனவரி 11 முதலே பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. ஆயுதப்படை (சி.ஆர்.பி.எப்.), கோப்ரா, மற்றும் ஜார்கண்ட் ஜாகுவார் ஆகிய பிரிவு போலீசார் இணைந்து பயங்கரவாதிகளை களையெடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மேற்கண்ட அட்டூழியங்களை நிகழ்த்திய முக்கிய மாவோயிஸ்டு பயங்கரவாதி மிசிர் பெஸ்ரா, தலைக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான். அவன் மேற்கு சிங்பும் மாவட்ட வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக சமீபத்தில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது.

தொடர் தேடுதல் வேட்டைகளின்போது, பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் புதைத்தும், மறைத்தும் வைத்த 5 நவீன வெடிகுண்டுகளை கைப்பற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். எலக்ட்ரானிக் வெடிபொருட்களான அவை மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்தன.

அவற்றில் ஒரு குண்டு 20 கிலோ எடையும், மற்றொரு குண்டு 12 கிலோ எடையும் இருந்தது. 5 கிலோ எடைகொண்ட மற்றொரு வெடிகுண்டு சோடா குய்ரா மற்றும் மராடிரி கிராமங்களுக்கு இடைப்பட்ட வனப்பகுதியில் கைப்பற்றப்பட்டது.


Next Story