ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரிய ராஜேந்திரபாலாஜியின் மனு தள்ளுபடி


ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரிய ராஜேந்திரபாலாஜியின் மனு தள்ளுபடி
x

கோப்புப்படம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரிய ராஜேந்திரபாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. இவர் வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதற்குள் தமிழக போலீசார் அவரை கைது செய்து விட்டனர். இதற்கிடையே ராஜேந்திரபாலாஜிக்கு கடந்த ஜனவரி மாதம் ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்ட போலீஸ் நிலைய மாவட்ட (விருதுநகர்) எல்லையை விட்டு அவர் வெளியே செல்லக்்கூடாது என்றும், பாஸ்போர்ட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் என்ற முறையில் இதில் பங்கேற்க வேண்டியுள்ளது. எனவே தனக்கு ஜாமீனில் தளர்வு அளிக்க வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் ராஜேந்திரபாலாஜி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய கோடை கால விடுமுறை அமர்வு விசாரித்தது.

அப்போது ராஜேந்திரபாலாஜி சார்பில் ஆஜரான வக்கீல்கள் சித்தாந்த் பட்நாகர், ஏவேலன் ஆகியோர், 'அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. எனவே, வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சென்னைக்கு பயணம் செய்ய அனுமதிக்கும் வகையில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும்' என வாதிட்டனர்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'மனுதாரர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொள்ளவில்லை என்றால் கூட்டம் நடைபெறாதா?' என கேட்டு, ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய ராஜேந்திரபாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

1 More update

Next Story