தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி; ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி


தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி; ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி
x

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டது.

சென்னை உள்பட 50 இடங்களில் ஊர்வலத்தை நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போலீசாரிடம் உரிய அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர்.

அதே நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மனித சங்கிலி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.

அனுமதி மறுப்பு

இதையடுத்து போலீசார் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பர் 4-ந்தேதி தனி நீதிபதி விசாரித்து, 6 இடங்களை தவிர 44 இடங்களில் உள் அரங்குகளில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை நடத்த வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.

ஐகோர்ட்டு அனுமதி

இதனை ஏற்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். 2 நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஒழுக்கத்தை கடைப்பிடித்து பேரணி நடத்த வேண்டும் என்றும், பிறரை தூண்டும் வகையில் செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கிடைத்தது.

தமிழக அரசு மேல்முறையீடு

ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்தும், ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசின் உள்துறை செயலாளர் பனீந்தரரெட்டி சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

முழுமையாக எதிர்க்கவில்லை

தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், 'ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்துவதற்கான அனுமதியை முழுமையாக ஆட்சேபிக்கவில்லை. இஷ்டம்போல வீதிதோறும் பேரணியை நடத்துவதை எதிர்க்கிறோம். குறிப்பாக கோவை குண்டுவெடிப்பு ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திறந்த வெளியில் பேரணியை நடத்தாமல், மைதானங்களில் மட்டுமே நடத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது' என்று தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரமேஷ் ஜெத்மலானி, 'விடுதலை சிறுத்தைகள், ஆளும் தி.மு.க. ஆகியவற்றின் பேரணிகளுக்கு அனுமதி அளித்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது' என்று வாதிட்டார்.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டசுப்ரீம் கோர்ட்டு, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 28-ந் தேதி ஒத்திவைத்தது.

இதற்கிடையே இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியது.

நீதிபதிகள் ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கிய சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதன்மூலம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கி உள்ளது. இதன்மூலம் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் எல்லையை தனி நீதிபதி மீறியதால், இரு நீதிபதிகள் அமர்வு தலையிட்டு உத்தரவைப் பிறப்பித்ததால், இந்த வழக்கு தொடர்பாக முன்வைக்கப்பட்ட பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டியதில்லை.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான நிபந்தனைகளை விதித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தலையிட்டு உத்தரவு பிறப்பித்தது சரிதான். எனவே இரு நீதிபதிகள் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

தனி நீதிபதி ரிட் மனு மீது கடந்த செப்டம்பர் 22-ந்தேதியும், மறு ஆய்வு மனுக்கள் மீது நவம்பர் 2-ந்தேதியும் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை பொறுத்தவரை, சென்னை மாநகர போலீஸ் சட்டத்தின் கொண்டு சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

தனி நீதிபதி சட்ட விதிகளை முறையாக விளக்கியதுடன் போதுமான நிபந்தனைகளையும் சரியாக விதித்திருந்தார். இவ்வாறு தனி நீதிபதி தான் பிறப்பித்த உத்தரவையே மறு ஆய்வு செய்திருக்கக் கூடாது.

மற்றொரு அமைப்பு (பி.எப்.ஐ) தடை செய்யப்பட்டதால் சில பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்க மாநில அரசு ஆட்சேபனை தெரிவித்ததாக வாதிடப்பட்டது.

குற்றம் இழைக்கவில்லை

இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் சிக்கலான தன்மையை கருத்தில் கொண்டு விவரங்களை இந்த உத்தரவில் பதிவு செய்ய விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் மாநில அரசு அளித்த போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பட்டியலை பார்க்கும் போது, பல வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரே பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

குற்றம் இழைத்தவர்களாக இல்லை. எனவே, 'ரிட்' மனு அல்லது மறுஆய்வு மனு மீதான தனி நீதிபதியின் உத்தரவில் எவ்வித பிழையும் இல்லை. எனவே இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story