சிவராத்தி வழிபாடு செய்ய மதவழிபாட்டு தலத்திற்குள் நுழைய முயற்சித்தவர்களை தடுத்து நிறுத்திய மாற்று சமுகத்தினர் - அதிர்ச்சி சம்பவம்...!


சிவராத்தி வழிபாடு செய்ய மதவழிபாட்டு தலத்திற்குள் நுழைய முயற்சித்தவர்களை தடுத்து நிறுத்திய மாற்று சமுகத்தினர் - அதிர்ச்சி சம்பவம்...!
x

நாடு முழுவதும் இந்து மத பண்டிகையான சிவராத்திரி நேற்று இரவு கொண்டாடப்பட்டது.

போபால்,

இந்து மதத்தின் முதன்மை கடவுள் சிவன். இதனிடையே, கடவுள் சிவனின் முக்கிய பண்டிகையான சிவராத்திரி நாடு முழுவதும் நேற்று இரவு கொண்டாடப்பட்டது. சிவராத்திரியையொட்டி சிவன் வழிபாட்டு தலங்களில் நேற்று காலை முதல் இரவு வரை மக்கள் வழிபாடு நடத்தினர். இரவு முழுவதும் விழித்திருந்து கடவுள் சிவனை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் கார்ஹொன் மாவட்டம் ஷப்ரா கிராமத்தின் சிவன் வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு நேற்று சிவராத்திரி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த தலித் சமுதாய மக்கள் சிவராத்தி பண்டிகையையொட்டி கடவுள் சிவனை வழிபட வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தினர். மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மற்றொரு தரப்பினர் அவர்களை வழிபாட்டு தலத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமடைந்தனர்.

தகவலறிந்து அந்த கிராமத்திற்கு வந்த போலீசார், மோதலை தடுத்து நிறுத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, அதே கார்ஹொன் மாவட்டம் கஸ்ரவாட் பகுதியில் உள்ள சிவன் வழிபாட்டு தலத்தில் வழிபாடு செய்ய தலித் சமுதாயத்தை சேர்ந்த பெண் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த மாற்று சமுதாயத்தினர் அந்த பெண்ணை வழிபாட்டு தலத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 4 பெண்கள், ஒரு ஆண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தங்கள் பாதுகாப்புடன் அந்த பெண்ணை மத வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்து வழிபாடு செய்ய செய்யவைத்தனர்.


Next Story