தீபாவளியையொட்டி பெங்களூருவில் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம்


தீபாவளியையொட்டி அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து இருப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

தீபாவளியையொட்டி அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து இருப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தீபாவளியும், பலகாரமும்...

தீபாவளி பண்டிகை என்றாேல படார்.... படார் என வெடிக்கும் பட்டாசுகளும், புத்தாடையும் தான் நினைவுக்கு வரும். அதற்கு அடுத்தப்படியாக வீடுகளில் பலகாரங்கள் கமகமக்கும். இதனால் தீபாவளி பண்டிகை வருவதற்கு முன்பே பட்டாசுகளையும் துணிமணிகளையும் மக்கள் வாங்கி வருகிறார்கள். முன்பு கடைகள், ஜவுளிகடைகளுக்கு சென்று பட்டாசு, துணிகளை வாங்குவதை வாடிக்கையாக வைத்திருந்த மக்கள் நவீன காலத்திற்கு ஏற்ப தற்போது ஆன்-லைனில் பட்டாசு, துணிகளை வாங்கி வருகிறார்கள்.

அதுபோல தான் இனிப்பு, காரவகைகளை உள்ளடக்கி பலகாரங்களை முன்பு வீடுகளிலேயே தயார் செய்து உண்டு மகிழ்வார்கள். மேலும் உற்றார், உறவினர் வீடுகளுக்கும் பகிர்ந்தளித்து தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வந்தோம்.

கடைகளில் வாங்கும் நிலை

ஆனால் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் பலகாரம் செய்வோரின் எண்ணிக்கையும் சுருங்கிவிட்டது. தற்போது கடைகளில் கிடைக்கும் அதிரசம், முறுக்கு, இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கி தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள். இருப்பினும் தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் தீபாவளி பலகாரங்களாக குலோப் ஜாமூன், அதிரசம், சுசீயம், முறுக்கு, பால்கோவா, சங்கரபாலி உள்ளிட்ட பலகாரங்களே தயார் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே தீபாவளி பண்டிகையையொட்டி அத்தியாவசிய பொருட்கள் விலை சற்று உயர்ந்து உள்ளது. அதாவது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சிறுபருப்பு விலை சற்று அதிகமாக உள்ளது. தீபாவளிக்கு இனிப்பு பலகாரங்கள் செய்ய பயன்படுத்தும் வெல்லம், கருப்பட்டி விலையும், எண்ெணய்களின் விலையும் உயர்ந்து உள்ளது.

இதுகுறித்து இல்லத்தரசிகள், கடைக்காரர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த கருத்துகள் பின்வருமாறு:-

விலை கூடுகிறது, குறைகிறது

பெங்களூரு யஷ்வந்தபுரம் ஏ.பி.எம்.சி. யார்டில் மொத்த மளிகை வியாபார கடை நடத்தி வரும் செந்தில் என்பவர் கூறியதாவது:-

தீபாவளியையொட்டி பருப்பு விலை சற்று அதிகரித்து உள்ளது. துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.104-ல் இருந்து ரூ.108 ஆக உள்ளது. மற்ற பருப்புகளின் விலையும் கூடி உள்ளது. உளுந்தம் பருப்பு ஒரு கிலோ ரூ.110-க்கும், கடலை பருப்பு ஒரு கிலோ ரூ.74-க்கும், சிறுபருப்பு ஒரு கிலோ ரூ.104-க்கும் விற்பனை ஆகிறது. வெல்லம் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.56 வரை விற்பனை செய்யப்படுகிறது. பச்சரிசி ஒரு கிலோ ரூ.33 ஆகும். சிவப்பு பச்சரிசி ஒரு கிலோ ரூ.58-க்கு விற்கப்படுகிறது. ஏலக்காயின் விலை ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.780 வரை விற்பனை ஆகிறது. அதுபோல் தேங்காய் எண்ணெய், பாமாயில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்கள் ஒரு லிட்டர் ரூ.8 முதல் ரூ.12 வரை உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி விலை உயர்ந்து உள்ளது என்று கூற முடியாது. முன்பு தீபாவளி பண்டிகையின் போது அத்தியாவசிய பொருட்கள் விலை கூடியது. தற்போது அப்படி எல்லாம் இல்லை. ஒரு நாள் விலை கூடுகிறது. ஒரு நாள் விலை குறைகிறது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் சில அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த பொருட்கள் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கடையில் சென்று பலகாரம்

பேகூரில் மளிகைக்கடை நடத்தி வரும் மகேஷ் என்பவர் கூறுகையில், "நான் எனது மளிகைக்கடைக்கு மொத்த விற்பனை கடையில் இருந்து தான் பொருட்களை வாங்கி வருகிறேன். அங்கு இருந்து வாங்கி வரும் விலையை விட கூடுதலாக ரூ.1 முதல் ரூ.2 வரை விற்பனை செய்கிறேன். எனக்கு வருமானம் கிடைக்க வேண்டும் அல்லவா?. தீபாவளியையொட்டி அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து தான் உள்ளது. ஆனாலும் பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது" என்றார்.

பெங்களூரு அல்சூரை சேர்ந்த இல்லத்தரசியான மகா என்பவர் கூறுகையில், "அத்தியாவசிய பொருட்கள் விலை அடிக்கடி உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் விலையை கூட்டி உள்ளனர். கடைக்கு சென்று பொருட்கள் வாங்கவே முடியவில்லை. விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து உள்ளது. இதனால் தீபாவளிக்கு பலகாரம் செய்ய பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் கடையில் சென்றே பலகாரம் வாங்கி விடலாம் என்று நினைக்கிறோம்" என்று கூறினார்.

விலை உயர்வை தடுக்க நடவடிக்கை

பொம்மனஹள்ளியை சேர்ந்த செல்வராணி என்பவர் கூறுகையில், "தீபாவளி பண்டிகையின் போது அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு காரணம் தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் நமக்கு தேவையாக இருக்கும்போது அதை சந்தையில் பதுக்கி வைத்து கொண்டு அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.தீபாவளி பண்டிகையின் போது லாபம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் விலையை அதிகரித்து பொருட்கள் விற்கிறார்கள். இப்படி செய்தால் நடுத்தர மக்கள் எப்படி பொருட்கள் வாங்குவார்கள்?. பண்டிகையின் போது அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

துணிகள் விலை உயர்வா?

இதுபோல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணிமணிகள், ஆடைகள் விலையும் உயர்ந்து இருப்பதாக கூறும் இளம்பெண் ஒருவர் கூறுகையில், பெங்களூருவை பொறுத்தவரை பிரபல ஜவுளிகடைகளும் உள்ளன. அதுபோல் சில்லரை விலை துணிகடைகளும், மொத்த வியாபார துணிகடைகளும் அதிகளவில் உள்ளன. அத்துடன் பெங்களூரு தகவல் தொழில்நுட்ப நகரம்.

இதனால் ஆன்-லைனில் துணிகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில பிரபல நிறுவனங்களின் துணிமணிகள் விலை அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்களை தவிர்த்து சில கடைகளில் துணிகளுக்கு தள்ளுபடி வழங்குகிறார்கள். ஆனால் தற்போது தள்ளுபடி விற்பனை இல்லை. அத்துடன் துணிகளின் விலை ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரித்து விற்பனை செய்கிறார்கள் என்றார்.

இதுகுறித்து ராஜாஜிநகரில் துணிக்கடை நடத்தி வரும் பைரோஸ் கான் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்காக ஆடைகள் விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவது பற்றி எனக்கு தெரியவில்லை. எனது கடையில் ரூ.350 முதல் ரூ.500 வரை சட்டைகள், ரூ.500 முதல் ரூ.650 வரை ஜூன்ஸ் பேண்டுகள், ரூ.450 முதல் ரூ.650 வரை சாதாரண பேண்டுகள், ரூ.200 முதல் ரூ.250 வரை டி-சர்டுகளை விற்பனை செய்து வருகிறேன். அதுபோல் தான் சுடிதார், சேலைகள் உள்ளிட்ட பெண்களுக்கான ஆடைகளையும் விற்பனை செய்து வருகிறேன். பொதுவாக ஆடைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் நாங்கள் கூறிய விலையில் ஆடைகளை வாங்கி செல்ல மாட்டார்கள். நாங்கள் கூறும் விலையில் இருந்து ரூ.100 முதல் ரூ.150 வரை குறைத்து தான் வாங்கி செல்கிறார்கள். இதனால் அதிக விலைக்கு ஆடைகள் விற்பனை செய்கிறோம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓசூரில் பட்டாசு வாங்குகிறோம்

பெங்களூரு சிவாஜிநகரை சேர்ந்த நாராயணன் என்பவர் கூறுகையில், சிவாஜிநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகள் வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து தான் பட்டாசுகளை இங்கே வாங்கிவைத்து விற்பனை செய்கிறார்கள். இதனால் பட்டாசு விலை அதிகமாக இருக்கும். தற்போது பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் பசுமை பட்டாசுகள் விற்பனை செய்கிறார்கள். அதன் விலையும் அதிகமாக உள்ளது. குறிப்பாக அந்த கடைகளில் பட்டாசு பாக்ஸ் ரூ.800 முதல் ரூ. 1,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே பட்டாசு பாக்ஸ் தமிழ்நாடு ஓசூருவில் ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது பாதி விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் புதுரகங்களுடன் தரமான பட்டாசுகளாகவும் உள்ளது.

அதனால் தீபாவளிக்கு ஓசூருவுக்கு காரில் சென்று பட்டாசு வாங்குகிறேன். மேலும் எங்கள் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் சேர்த்து பட்டாசுகள் வாங்கி வருகிறேன். என்ன இங்கிருந்து ஓசூருவுக்கு செல்ல 40 கி.மீ. ஆகிறது. மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. என்றார்.


Next Story