தொங்கு சட்டசபையை எதிர்பார்க்கும் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம்; தேர்தல் பிரசாரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
தொங்கு சட்டசபையை எதிர்பார்க்கும் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
மக்களை பிரிக்க முயற்சி
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று எலகங்கா, துமகூரு, நெலமங்களா உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கர்நாடகத்தில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது அதிகளவில் ஊழல்கள் நடந்தன. வினாத்தாள் கசிந்து முறைகேடு, போலீசார் நியமன முறைகேடு, ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் முறைகேடு நடந்தது. சித்தராமையா மாநிலத்தை கொள்ளையடித்தார், காங்கிரசை தோற்கடிப்பது, ஊழலை ஒழிப்பதற்கு சமம். காங்கிரஸ் கட்சி சாதி, மதங்களின் அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சி செய்தது.
இரட்டை என்ஜின் அரசு
சமுதாயத்தில் வெறுப்பை விதைத்தது காங்கிரஸ். அக்கட்சி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உத்தரவாத அட்டைகளை மக்களுக்கு வினியோகம் செய்கிறது. அது பயனற்றது. அதுபற்றி தேர்தல் முடியும் வரை பேசுவார்கள். தேர்தல் முடிந்து விட்டால் அதை காங்கிரசார் மறந்து விடுவார்கள். காங்கிரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.
இரட்டை என்ஜின் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். ஜனதா தளம் (எஸ்) குடும்ப அரசியலை செய்கிறது. அந்த கட்சி, தொங்கு சட்டசபை அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அதனால் அந்த கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டாம். பா.ஜனதா கட்சியால் மட்டுமே வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். மத்திய பா.ஜனதா அரசு சீர்மிகு நகர திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அரசு 50 சதவீத நிதியை வழங்குகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.