40 வயது நபரின் வயிற்றில் 50 நாணயங்கள்... அறுவை சிகிச்சையின்றி வெளியே எடுத்த மருத்துவர்கள்


40 வயது நபரின் வயிற்றில் 50 நாணயங்கள்... அறுவை சிகிச்சையின்றி வெளியே எடுத்த மருத்துவர்கள்
x

ராஜஸ்தானில் 40 வயது நபரின் வயிற்றுக்குள் இருந்த 50க்கும் கூடுதலான நாணயங்களை அறுவை சிகிச்சை எதுவுமின்றி மருத்துவர்கள் வெளியே எடுத்து உள்ளனர்.



ஜோத்பூர்,



ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் வசித்து வரும் 40 வயது நபர் தனக்கு பொறுக்க முடியாத வயிறு வலி உள்ளது என்று உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

அவருக்கு மருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் பிரிவுக்கு கொண்டு சென்று வயிற்றில் என்ன உள்ளது என பரிசோதனை செய்யப்பட்டது. இதில், எண்டோஸ்கோபி செய்ததில் அவரது வயிற்றில் நாணய குவியல்கள் இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி மூத்த மருத்துவர் சுனில் ததிச் கூறும்போது, வயிற்றின் மேற்பகுதியிலேயே நிறைய நாணயங்கள் இருந்தன. அதனை இயற்கை வழியிலேயே நீக்குவது என முடிவு செய்தோம். ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாணயங்களையே உணவு குழாய் வழியே வெளியேற்ற முடியும் என்பதனால், மருத்துவர்களுக்கு ஒரு கடுமையான சவாலான பணியாகவே இருந்தது.

இந்த பணியில், ஒவ்வொரு ஊழியரும் பங்காற்றினார். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் செயலாற்றினார்கள். இதுபோன்ற விசயங்கள் இளம் வயதினரிடையே ஏற்படுவது உண்டு. எனினும், இவ்வளவு எண்ணிக்கையிலான நாணயங்கள் வயதில் மூத்த நபரின் வயிற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என கூறியுள்ளார்.

அந்த நபர் மனநல பாதிப்பினால், நாணயங்களை வயிற்றுக்குள் செலுத்தி உள்ளார் என அவரது உறவினர்கள் மருத்துவரிடம் கூறியுள்ளனர். இந்த முறையில் நாணயங்களை நீக்க 2 நாட்கள் வரை ஆகியுள்ளது. அந்த நோயாளி கடந்த காலத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் மனநலம் பாதித்த 50 வயது பழங்குடியின நபர் ஒருவர் 72 நாணயங்களை விழுங்கி உள்ளார். 20 ஆண்டுகளாக அவரிடம் இந்த பழக்கம் இருந்துள்ளது. இதனால், இரும்பு மற்றும் உலோக நாணயங்களை விழுங்கும் பழக்கம் இருந்தது. சில இயற்கையாகவே வெளியேறி விட்டது. சில வெளியேறாமல் வயிற்றிலேயே தங்கி விட்டது. அவரது வயிற்றில் இருந்த நாணயங்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நீக்கினர்.


Next Story