பனிப்பொழிவால் ஆஸ்பத்திரி செல்ல முடியாத நிலை:'வீடியோ கால்' மூலம் கர்ப்பிணியின் சுக பிரசவத்துக்கு உதவிய டாக்டர் காஷ்மீரில் நெகிழ்ச்சி சம்பவம்


பனிப்பொழிவால் ஆஸ்பத்திரி செல்ல முடியாத நிலை:வீடியோ கால் மூலம் கர்ப்பிணியின் சுக பிரசவத்துக்கு உதவிய டாக்டர் காஷ்மீரில் நெகிழ்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 12 Feb 2023 11:45 PM GMT (Updated: 12 Feb 2023 11:45 PM GMT)

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் தொலைதூர கிராமமான கெரன் பகுதி பனிப்பொழிவால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் தொலைதூர கிராமமான கெரன் பகுதி பனிப்பொழிவால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் இருந்ததால், பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே கிரால்போராவில் உள்ள மாவட்ட துணை மருத்துவனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் பனிப்பொழிவு காரணமாக சாலை வழியாகவோ, ஹெலிகாப்டர் மூலமோ அங்கு செல்ல முடியாத நிலை.

இதனால் செய்வதறியாது திகைத்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், இது குறித்து கிரால்போரா ஆஸ்பத்திரி மகப்பேறு டாக்டர் பர்வைசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் வாட்ஸ்அப் 'வீடியோ கால்' மூலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அர்சாத் சோபிக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்மூலம் டாக்டர் அர்சாத் சோபியும் செயல்பட, கர்ப்பிணிக்கு சுகபிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

'வீடியோ கால்' மூலம் சுக பிரசவத்துக்கு வழி செய்த டாக்டர் பர்வைசின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story