தமிழக கர்ப்பிணி, சிசுக்கள் இறந்த விவகாரத்தில் டாக்டர், 3 நர்சுகள் பணி இடை நீக்கம்


தமிழக கர்ப்பிணி, சிசுக்கள் இறந்த விவகாரத்தில் டாக்டர், 3 நர்சுகள் பணி இடை நீக்கம்
x

துமகூருவில் அரசு ஆஸ்பத்திரியில், ஆதார் கார்டு இல்லை என கூறி பிரசவம் பார்க்காததால் தமிழக கர்ப்பிணி, அவர் பிரசவித்த 2 சிசுக்களும் வீட்டிலேயே உயிரிழந்தன. இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர், 3 நர்சுகளை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பெங்களூரு:

பணி இடைநீக்கம்

கர்நாடக மாநிலம் துமகூருவில் நேற்று முன்தினம் கஸ்தூரி(வயது30) என்ற பெண் பிரசவ வலி ஏற்பட்டு துமகூரு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு கஸ்தூரியிடம் எந்த ஆவணமும் இல்லை என்று கூறி பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி டாக்டர் மற்றும் நர்சுகள் அறிவுறுத்தினர். எவ்வளவோ கேட்டும் பிரசவம் பார்க்க நிராகரித்துவிட்டதால், அந்த பெண் மீண்டும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அப்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த பெண் மற்றும் 2 சிசுக்கள் இறந்துவிட்டன. இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண் தமிழகத்தை சேர்ந்தவர். அவர் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அவரது கணவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பெற்றோர் இருவரும் இறந்துவிட்டதால் அந்த குழந்தை தற்போது அனாதையாகிவிட்டது. இந்த சம்பவத்தில் கர்நாடக அரசை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக குறை கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமான ஒரு டாக்டர் மற்றும் 3 நர்சுகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இது கொடூரமானது

துமகூருவில் பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணி பெண்ணை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அந்த பெண்ணுக்கு வீட்டில் நடந்த பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த பெண்ணும், இரட்டை சிசுக்களும் என 3 பேரும் இறந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொடூரமானது.

மேல்நோட்டமாக பார்க்கும்போது அப்போது பணியில் இருந்த அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மற்றும் 3 நர்சுகள் தவறு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை கமிஷனர் தலைமையில் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளேன். 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளேன்.

நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்

அவசர நேரத்தில் நோயாளியின் வலியை தீர்ப்பது டாக்டரின் கடமை. அந்த நேரத்தில் நோயாளியிடம் எந்த ஆவணத்தையும் கேட்கக்கூடாது என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மீண்டும் ஒரு முறை அந்த உத்தரவை வெளியிட்டுள்ளோம். இந்த சம்பவத்தை எங்கள் அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. விசாரணையில் டாக்டர் மற்றும் நர்சுகள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இத்தகைய சம்பவம் மீண்டும் நடைபெறாத வண்ணம் எச்சரிக்கையாக பணியாற்றும்படி அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அந்த பெண்ணின் பெண் குழந்தை, துமகூருவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாக்டர்களுக்கு நோட்டீசு

அந்த குழந்தையின் கல்விக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும் துமகூரு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி, சம்பந்தப்பட்ட டாக்டர், நர்சுகள் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளோம். மேலும் அந்த ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பிற டாக்டர்களுக்கும் நோட்டீசு அனுப்பியுள்ளோம். 24 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.

இத்தகைய சம்பவம் மீண்டும் நடைபெறவே கூடாது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வரும்போது எந்த ஆவணமும் தேவை இல்லை. தாய் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை சிகிச்சை அளித்த பிறகு கேட்டு பெறலாம். இதுகுறித்து ஏற்கனவே உத்தரவு உள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை வசதி இல்லாதபோது தனியார் ஆஸ்பத்திரியில் அந்த சிகிச்சையை பெற முடியும். அந்த செலவை அரசே ஏற்கும்.

உயிர் தான் முக்கியம்

அனைத்து வசதிகளும் இருந்தும், டாக்டர் மற்றும் நர்சுகள் செய்த தவறால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்த தினம், ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் கருப்பு தினமாகும். இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எனது வேதனையையும் பதிவு செய்கிறேன். உயிரிழந்த பெண்ணின் உறவினர்களை கண்டுபிடிக்க போலீசார் கடந்த 36 மணி நேரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் உறவினர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தகைய சூழ்நிலை இருந்தாலும் அந்த முழு பொறுப்பை அரசே ஏற்று கொள்கிறது. கர்ப்பிணி பெண் எந்த மாநிலமாக இருந்தாலும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்திருக்க வேண்டும். டாக்டர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். இங்கு ஆவணங்கள் முக்கியம் அல்ல. உயிர் தான் முக்கியம். சிலர் செய்த தவறால் ஒட்டுமொத்த சுகாதாரத்துறைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

சிசுக்கள் இறந்தன

இந்த சம்பவத்திற்கு நான் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது மைசூருவில் எத்தனை சிசுக்கள் இறந்தன என்ற விவரங்களை என்னால் வழங்க முடியும். அவர் பதவியை ராஜினாமா செய்வாரா?. இத்தகைய சம்பவத்திலும் அரசியல் செய்கிறார் என்றால், அவர் ஒரு நல்ல மனிதராக முடியாது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

புதிய சட்டம் கொண்டுவர முடிவு

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறுகையில், "கர்நாடகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் கொடூரமான முறையில் நடந்து கொண்டால் அத்தகையவரை பணி இடைநீக்கம் மட்டும் செய்ய மாட்டோம், நிரந்தரமாக பணி நீக்கமே செய்து விடுவோம். அதற்காக புதிய சட்டத்தை கொண்டுவருவது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசிக்கப்படும். வருகிற சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டம் இயற்றுவது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும்'' என்றார்.


Next Story