ஆம்புலன்ஸ் விபத்தில் கர்ப்பிணி மனைவியுடன் டிரைவர் பரிதாப சாவு; வயிற்றிலேயே சிசுவும் உயிரிழந்த சோகம்


ஆம்புலன்ஸ் விபத்தில் கர்ப்பிணி மனைவியுடன் டிரைவர் பரிதாப சாவு; வயிற்றிலேயே சிசுவும் உயிரிழந்த சோகம்
x

சிவமொக்கா அருகே, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுவிட்டு திரும்பியபோது ஆம்புலன்ஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்சை ஓட்டி வந்த டிரைவர், தனது கர்ப்பிணி மனைவியுடன் பலியானார். வயிற்றுக்குள்ளேயே சிசு உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சிவமொக்கா;

கர்ப்பிணிகள்

தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா மலஹால் கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்ஜெயா. இவர் சன்னகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரோஜா (வயது 23). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.

தனஞ்ஜெயாவின் அண்ணி சுனிதா. சுனிதாவுக்கும், தனஞ்ஜெயாவின் அண்ணன் சந்தோசுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் ரோஜாவும், சுனிதாவும் கர்ப்பம் அடைந்தனர். தற்போது ரோஜா 9 மாத கர்ப்பிணியாகவும், சுனிதா 7 மாத கர்ப்பிணியாகவும் இருந்தனர்.

கார் - ஆம்புலன்ஸ் மோதல்

இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனைக்காக ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு சிவமொக்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தனஞ்ஜெயா வந்தார். இவர்களுடன் இவர்களது உறவுக்கார பெண் சேத்தனா என்பவரும் வந்திருந்தார். ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் அங்கிருந்து அவர்களை ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு தனஞ்ஜெயா புறப்பட்டார்.

அவர்கள் சிவமொக்கா தாலுகா பேடரஒசஹள்ளி ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே தாவணகெரே டவுனில் இருந்து வந்த ஒரு காரும், இவர்கள் சென்ற ஆம்புலன்சும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

டிரைவர் பலி

இந்த விபத்தில் ஆம்புலன்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து அப்பளம்போல நொறுங்கியது. ஆம்புலன்சின் இடிபாடுகளில் சிக்கி தனஞ்ஜெயா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி ரோஜா, அண்ணி சுனிதா, உறவுக்கார பெண் சேத்தனா ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் உடனடியாக இதுபற்றி சிவமொக்கா புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்த ரோஜா, சுனிதா மற்றும் சேத்தனா ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வயிற்றுக்குள்ளேயே சிசு உயிரிழப்பு

இதில் ரோஜாவின் நிலைமை மோசமாக இருந்ததால் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். ஆனால் குழந்தை இறந்த நிலையில்தான் பிறந்தது. விபத்தில் ரோஜாவின் வயிற்றுக்குள்ளேயே சிசு பரிதாபமாக இறந்துவிட்டது டாக்டர்களுக்கு தெரியவந்தது.

தொடர்ந்து ரோஜாவின் நிலை மோசமாக இருந்ததால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் பலியானார். இதனால் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. அதேபோல் சுனிதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும், சேத்தனாவுக்கும் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மற்றொரு காரில் வந்தவர்களின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. விபத்துக்கு யார் காரணம் என்றும் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சம்பவத்தால் பேடரஒசஹள்ளி பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த சிவமொக்கா போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி டிரைவரும், வயிற்றில் சிசுவுடன் அவரது மனைவியும் பரிதாபமாக பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story