2025-ம் ஆண்டுக்குள் போதை பொருள் இல்லா உத்தரகாண்ட்: அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவு
2025-ம் ஆண்டுக்குள் போதை பொருள் இல்லாத உத்தரகாண்ட் என்ற சாதனையை படைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
டேராடூன்,
உத்தரகாண்டின் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி போதை பொருள் இல்லாத மாநிலம் உருவாக்க வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். உத்தரகாண்டில் தனியார் முயற்சியுடன் 43 போதை பொருள் மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உத்தரகாண்டில் மாநில அளவிலான போதை பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.
இதில் தலைமையேற்று பேசிய முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி, கூட்டங்கள் மட்டுமே நடத்தி விட்டு விடாமல், அதற்கு பதிலாக இந்த பணிகளை செய்வதற்காக கவுரவிக்கப்படும் பணி கலாசாரம் ஒன்றை அதிகாரிகள் உருவாக்க வேண்டும். இது அதிகாரிகளின் கடமை. அதனுடன் மனிதகுலத்திற்கான சேவையாகும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், 2025-ம் ஆண்டுக்குள் போதை பொருள் இல்லாத உத்தரகாண்ட் என்ற சாதனையை படைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி தமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
அதற்கான வழிகாட்டுதல்களை அமல்படுத்த தடையாக உள்ள சவால்களை பற்றி பேச வேண்டும் என்றும், அவற்றை நிறுவிடுவதற்கான, செயல்படுத்த, மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவர்களை ஏற்பாடு செய்வது போன்ற செயல் திட்டங்களை பற்றியும் அதிகாரிகள் முறையாக பேச வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
இந்த கூட்டத்தில் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை இயக்குநர் ஜெனரல் ஞானேஷ்வர் சிங் கூறும்போது, 2022-ம் ஆண்டில் 1,232 கிலோ கஞ்சா, 238 கிலோ கஞ்சா செடி, 1.57 கிலோ ஹெராயின் உள்பட பல கிலோ கணக்கிலான பல்வேறு போதை பொருட்கள், 1.05 லட்சம் கேப்சூல்கள், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை ஊசிகள், 32 ஆயிரம் மாத்திரைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என கூறியுள்ளார்.