பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.8 கோடி போதைப்பொருள் பறிமுதல்
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்தி வந்து பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.8 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கமிஷனர் கூறினார்.
பெங்களூரு:
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்தி வந்து பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.8 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கமிஷனர் கூறினார்.
5 பேர் கைது
பெங்களூரு விவேக்நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக போலீசார் வாலிபர் ஒருவரை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கஞ்சா விற்றதாக வெளிநாட்டை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டன. இந்த நிலையில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கமிஷனர் சரணப்பா, பிடிபட்ட போதைப்பொருட்களை நேரில் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
10 கிலோ கஞ்சா
ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரெயில்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு, பெங்களூருவில் முக்கிய இடங்களில் வைத்து விற்பனை நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், 4 பெண்களும் ஆந்திர மாநிலம் சிந்தபள்ளியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் பெங்களூருவில் உள்ள வியாபாரிகளுக்கும், மாணவர்களுக்கும் கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 1 கிலோ எம்.டி.எம்.ஏ., 8 கிலோ ஆசிஸ் ஆயில், 10 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.8 கோடி ஆகும். அவர்களிடம் கஞ்சா விற்பனை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.