ஐதராபாத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 வெளிநாட்டவர்கள் உட்பட 7 பேர் கைது
ஐதராபாத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை வெள்ளிக்கிழமை போலீசார் மீட்டனர். மேலும் இது தொடர்பாக மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 கிராம் கோகைன் மற்றும் 300 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் ஐதராபாத்தைச் சேர்ந்த பி சாய் அகேஷ் (வயது 25), தும்மா பானு தேஜா ரெட்டி (வயது 23) கேரளாவின் திருச்சூரை சேர்ந்த எம் சஞ்சய் சுனில் குமார் (வயது 27), நைஜீரியாவைச் சேர்ந்த அக்போவோ மேக்ஸ்வெல் (வயது 37), ஓகிகே சிகோசி பிளெசிங் (வயது 32) மற்றும் ஐகேம் ஆஸ்டின் ஒபாகா (வயது 41) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை பயன்படுத்தி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அருகில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.