குடிபோதையில் விபத்து: பெண் பலி; கணவர் காயம்... சிக்குவாரா அரசியல் புள்ளியின் மகன்?


குடிபோதையில் விபத்து:  பெண் பலி; கணவர் காயம்... சிக்குவாரா அரசியல் புள்ளியின் மகன்?
x

மராட்டியத்தில் புனே நகரில் குடிபோதையில் போர்ஷே ரக கார் ஒன்றை ஓட்டி சென்ற சிறுவன், பைக்கில் சென்ற 2 மென்பொருள் என்ஜினீயர்கள் மீது மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர்.

புனே,

மராட்டியத்தின் ஒர்லி நகரில் கொலிவாடா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் நகவா. இவருடைய மனைவி காவேரி நகவா. வழக்கம்போல் இன்று காலை இவர்கள் இருவரும் ஸ்கூட்டர் ஒன்றில் மீன் வாங்க சென்றனர்.

அவற்றை பின்னர் விற்பது வழக்கம். இந்நிலையில், அவர்கள் மீன் வாங்கி கொண்டு திரும்பி வரும்போது, பின்னால் வந்த பி.எம்.டபிள்யூ. ரக கார் ஒன்று இவர்களுடைய ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பிரதீப் தரையில் விழுந்த நிலையில், காவேரி காரில் 100 மீட்டர் தொலைவு வரை இழுத்து செல்லப்பட்டு உள்ளார்.

அவர் பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காரை குடிபோதையில் ஓட்டி சென்றது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் துணை தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா (வயது 24) என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடந்ததும் அவர் தப்பியோடி விட்டார். இதுபற்றி ராஜேஷ் ஷா மற்றும் அவருடைய கார் ஓட்டுநர் ராஜ்ஸ்ரீ பிஜாவத் ஆகியோரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

லேசான காயங்களுடன் தப்பிய பிரதீப் சம்பவம் பற்றி கூறும்போது, அதிகாலை 5.30 மணியளவில் விபத்து நடந்தது. பின்னால் வந்த கார் ஒன்று ஸ்கூட்டரின் மீது மோதியது என கூறினார். இதில், அவர் இடதுபுறம் விழுந்தபோதும் அவருடைய மனைவி சாலையில் இழுத்து செல்லப்பட்டு உள்ளார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த சம்பவத்தில், தொடர்புடைய நபர்கள் பெரிய இடத்து மனிதர்கள். யாரும் எதுவும் செய்ய முடியாது என்று பிரதீப் கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, மிஹிர் ஷாவின் பெயரில் வாகனம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சம்பவத்தின்போது, மிஹிர் ஷா மற்றும் அவர்களுடைய ஓட்டுநர் காரில் இருந்தனர்.

நேற்றிரவு ஜுகுவில் உள்ள பார் ஒன்றில் மிஹிர் ஷா மதுபானம் குடித்து இருக்கிறார். அவர் வீடு திரும்பும்போது, ஓட்டுநரிடம் நீண்ட தொலைவுக்கு காரை ஓட்டி செல்லும்படி கூறியுள்ளார்.

கார் ஒர்லிக்கு வந்ததும், காரை ஓட்டுகிறேன் என மிஹிர் கூறியுள்ளார். அதன்பின்னர் காரை அதிவிரைவாக ஓட்டி சென்ற மிஹிர் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளார்.

இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என கூறியுள்ள முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, சட்டம் அதன் கடமையை செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். போலீசாரிடம் பேசியுள்ளேன். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கடந்த மே மாதத்தில், புனே நகரில் குடிபோதையில் போர்ஷே ரக கார் ஒன்றை ஓட்டி சென்ற சிறுவன், பைக்கில் சென்ற 2 மென்பொருள் என்ஜினீயர்கள் மீது மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில், ரியல் எஸ்டேட் அதிபரான சிறுவனின் தந்தை, தாய் மற்றும் தாத்தா ஆகியோர் தடயங்களை அழிக்க முயன்ற குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் சிறுவனை விடுவிக்கும்படி உத்தரவிட்டது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுவனிடம் 300 பக்க கட்டுரையை சமர்ப்பிக்க கூறி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த பரபரப்புக்கிடையே மற்றொரு கார் விபத்து சம்பவம் நடந்து மராட்டியத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story