கோலார் தங்கவயலில் தொடர் மின்தடையால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி


கோலார் தங்கவயலில் தொடர் மின்தடையால் பொதுமக்கள்,  மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:47 PM GMT)

கோலார் தங்கவயலில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடையால் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ., பெஸ்காம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோலார் தங்கவயல்

தொடர் மின்தடை

கோலார் தங்கவயலில் கடந்த 3 மாதங்களாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிற்சாலை நடத்தி வருபவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் என பலதரப்பட்டவர்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே மின்வினியோகத்தை சீரமைக்க கோரி கோலார் தங்கவயல் மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினாலும், மின்தடையை ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. இந்த மின்தடை குறித்து பொதுமக்கள் தங்களின் பல்வேறு கருத்துகளை முன் வைத்துள்ளனர்.

மாணவர்கள் பாதிப்பு

இதுகுறித்து கோலார் தங்கவயல் சாமில் வட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரன் என்பவர் கூறுகையில்,

கடந்த 3 மாதங்களாக மின் கம்பங்கள் சீரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு காரணங்களை கூறி மின்தடை ஏற்படுவதாக கூறி வருகின்றனர். ஆனால் எந்த இடத்திலும் மின் கம்பங்களை சீரமைத்ததாக தெரியவில்லை. இந்த தொடர் மின்தடையால் இரவு நேரங்களில் பள்ளி மாணவர்களால் படிக்க முடியவில்லை.

தற்போது தேர்வு நெருங்கிவிட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியவில்லை. மின்தடையால் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து பெஸ்காம் அதிகாரிகள், தொகுதி எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

200 யூனிட் இலவச மின்சாரம்

மாரிகுப்பம் வெஸ்ட் கில்பர்ட்ஸ் பகுதியை சேர்ந்த எஸ்.ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், கர்நாடக அரசு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறியுள்ளது. கோலார் தங்கவயலில் அனைவருக்கும் இந்த இலவச திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஏனென்றால் மின்சாரம் இருந்தால்தானே, மின் கட்டணம் வரும். வாரத்திற்கு 5 நாட்கள் மின்சாரம் இருப்பது இல்லை.

இதனால் 200 யூனிட் இலவச மின்சாரம் என்பது எங்களுக்கு தேவையில்லாத ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு புறம் இலவச மின்சாரத்தை கொடுத்துவிட்டு, மின்தடையை ஏற்படுத்தி மக்களை அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ.விடம் புகார் அளித்தும், அவர் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. பெஸ்காம் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் நாள் முழுவதும் பொதுமக்கள் இருளிலேயே மூழ்கி கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

கோவிலில் பூஜை பாதிப்பு

மாரிகுப்பம் கருமாரியம்மன் கோவிலை சேர்ந்த பூசாரி தயாளன் கூறுகையில், தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கோவில் திருவிழாக்கள் அதிகளவு நடைபெறும். கோலார் தங்கவயலில் உள்ள பெருமாள் கோவிலில் உரியடி மற்றும் தேர்த் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.

இந்த நேரத்தில் மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக பக்தர்கள் அதிகளவு கோவிலுக்கு பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை வருவார்கள்.

ஆனால் அந்த நேரத்தில்தான் அதிகளவு மின்தடை ஏற்படுகிறது. இந்த மின்தடையால் பக்தர்கள் கோவிலுக்கு வருவது குறைந்துவிட்டது.அதேபோல கோவில்களிலும் இந்த மின்தடையால் பூஜைகள் பாதிக்கப்படுகிறது. எனவே பெஸ்காம் நிர்வாகம் தடையில்லாமல் மின்சாரம் வழங்கவேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். என்றார்.

பெஸ்காம், எம்.எல்.ஏ. நடவடிக்கை

மாரிகுப்பம் மலையாளி லைனை சேர்ந்த வியாபாரி சக்கரவர்த்தி கூறுகையில்,

கோலாரில் பெஸ்காம் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. தொடர் மின்தடையால் தொழிற்சாலைகள், வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோல விவசாயம் தொடர்புடைய தொழில்களும் பாதிக்கப்படுகிறது. இந்த தொடர் மின்தடைக்கு உடனே தீர்வு காணவேண்டும். நிரந்தரமாக மின்வினியோகம் வழங்கவேண்டும்.

அப்போதுதான் தொழில் நிறுவனங்கள் செயல்பட முடியும். இதனால் ெபஸ்காம் நிர்வாகம் மட்டுமின்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

இதற்கு தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் பெஸ்காம் நிர்வாகம், எம்.எல்.ஏ.வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.

இதுகுறித்து பெஸ்காம் அதிகாரிகள், தொகுதி எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.




Next Story