சிக்கமகளூருவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்


சிக்கமகளூருவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 30 April 2023 6:45 PM GMT (Updated: 30 April 2023 6:46 PM GMT)

வார விடுமுறை நாட்களையொட்டி சிக்கமகளூருவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிக்கமகளூரு-

வார விடுமுறை நாட்களையொட்டி சிக்கமகளூருவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா தலங்கள்

சிக்கமகளூரு மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் இந்த மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கர்நாடகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.

தற்போது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டதாலும், வார விடுமுறை நாட்கள் என்பதாலும் கடந்த 2 நாட்களாக சிக்கமகளூருவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

பிரசார கூட்டம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள், கார்கள் குவிந்தன. காலை 8 மணிக்கு சிக்கமகளூரு அருகே கைமரம் பகுதியில் இருந்து பாபாபுடன் கிரி செல்வதற்காக ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த சந்தர்ப்பத்தில் கைமரம் பகுதியில் சிக்கமகளூரு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சி.டி.ரவி, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் பா.ஜனதாவினர் அங்கு தேர்தல் பிரசார கூட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

போக்குவரத்து நெரிசலில்...

இதையடுத்து பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்ட மத்திய மந்திரி எல்.முருகன், சி.டி.ரவி உள்ளிட்டோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அவர்கள் ஒரு வழியாக கைமரத்தில் இருந்து சிக்கமகளூருவை காலதாமதமாக வந்தடைந்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாக தென்பட்டனர்.


Next Story