டெல்லியில் தசரா விழா கொண்டாட்டம்: முதல்-மந்திரி கெஜ்ரிவால், நடிகர் பிரபாஸ் பங்கேற்பு
டெல்லியில் இன்று மாலை நடைபெற இருக்கிற தசரா விழா கொண்டாட்டத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்களில் மக்கள் இன்று ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கால், 2 ஆண்டுகளாக அமலில் இருந்த தடைகள் விலக்கி கொள்ளப்பட்ட சூழலில், இந்த தசரா கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக டெல்லி செங்கோட்டை மைதானத்தில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத்தின் உருவ பொம்மைகள் பல அடி உயரத்திற்கு நிறுவப்பட்டு உள்ளன.
இந்த தசரா கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ள லவ் குஷ் ராம்லீலா கமிட்டியின் தலைவர் அர்ஜூன் குமார் கூறும்போது, சில எதிர்பாராத சூழ்நிலைகளால் ஜனாதிபதி திரவுபதி முர்முவால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என கடிதம் ஒன்றின் வழியே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த, தசரா விழா கொண்டாட்டத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அவர்கள் அழைப்பை ஏற்று கொண்டுள்ளனர் என கூறியுள்ளார்.
இந்த தசரா கொண்டாட்டத்தில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார். பாகுபலி நடிகர் பிரபாஸ் மற்றும் கெஜ்ரிவால் இணைந்து, ராவணன் உருவ பொம்மையின் மீது அம்பு எய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.