கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜெய்சங்கர் 6 நாள் பயணம்: இன்று புறப்படுகிறார்


கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜெய்சங்கர் 6 நாள் பயணம்: இன்று புறப்படுகிறார்
x

கோப்புப்படம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 6 நாள் பயணமாக ஜெய்சங்கர் இன்று செல்கிறார்.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உகாண்டா, மொசாம்பிக் ஆகிய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல்கட்டமாக, இன்று அவர் உகாண்டா போய்ச் சேருகிறார். இந்த பயணத்தின்போது, உகாண்டா வெளியுறவுத்துறை மந்திரி ஜெனரல் ஜேஜே ஒடாங்கோவுடன் பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அந்த நாட்டு தலைமையையும், இதர மந்திரிகளையும் சந்திக்கிறார்.

ஒப்பந்தம் கையெழுத்து

உகாண்டாவில் ஜின்ஜா நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை ஜெய்சங்கர் திறந்து வைக்கிறார். இந்த வளாகம் தொடர்பாக, இந்திய அரசுக்கும், உகாண்டா அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்தியாவுக்கு வெளியே இந்த பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

உகாண்டாவில், சூரிய மின்சாரத்தால் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்துக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். உகாண்டா வர்த்தக சமூகத்தினர் மற்றும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்திய வம்சாவளியினருடன் உரையாடுகிறார்.

மொசாம்பிக்

உகாண்டா பயணத்தை முடித்துக் கொண்டு, 13-ந் தேதி மொசாம்பிக் நாட்டுக்கு ஜெய்சங்கர் செல்கிறார். அந்நாட்டுக்கு இந்திய வெளியுறவு மந்திரி ஒருவர் செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

இந்த பயணத்தில், மொசாம்பிக் நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அந்நாட்டு வெளியுறவு மந்திரி வெரோனிகா மகாமோவுடன் கூட்டு ஆணைய கூட்டத்துக்கு கூட்டாக தலைமை தாங்குகிறார்.

இதர மந்திரிகளையும், மொசாம்பிக் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து பேசுகிறார். இந்திய வம்சாவளியினருடன் உரையாடுகிறார். 15-ந் தேதி, அங்கிருந்து டெல்லிக்கு புறப்படுகிறார்.


Next Story