டெல்லியை கலக்கும் மதுபான ஊழல் வழக்கில் ரூ.76.5 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி


டெல்லியை கலக்கும் மதுபான ஊழல் வழக்கில் ரூ.76.5 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
x

டெல்லியை கலக்கும் மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களின் ரூ.76.5 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிற டெல்லியில், மதுபான கொள்கையில் மாபெரும் ஊழல் அரங்கேறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடைகள் உரிமம் வழங்கி சலுகைகளை தாராளமாக அளித்து, லஞ்சம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இதில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஊழலில் மணிஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதுடன், அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டது.

இந்த ஊழலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா பெயரும் அடிபடுகிறது. குறிப்பாக சரத் ரெட்டி, கே கவிதா, மகுந்தா சீனிவாசுலு ரெட்டி ஆகியோரால் நடத்தப்படுகிற சவுத் குரூப்பிடம் இருந்து, அமித் அரோரா உள்பட பல்வேறு நபர்களால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு விஜய் நாயர் என்பவர் மூலம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு இருக்கிறது.

இந்த விவகாரத்தில் கவிதாவிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமாக டெல்லி, மும்பையில் உள்ள விடுதிகள், வாகனங்கள். வங்கி டெபாசிட்டுகள் என ரூ.76 கோடியே 54 லட்சம் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டது.

இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-

* அமலாக்கத்துறை இயக்குனரகம் ரூ.76.54 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி உள்ளது.

* முடக்கப்பட்ட சொத்துகள், ஆத் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் விஜய் நாயர், ஐதராபாத் மது தொழில் அதிபரும், ராபின் மதுபான நிறுனத்தின் பங்குதாரருமான அருண் பிள்ளைக்கு சொந்தமானவை ஆகும்.

இந்த அருண்பிள்ளை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதா, மதுபான தொழில் அதிபர் சமீர் மஹந்த்ரு, அவரது மனைவி கீதிகா மஹந்த்ரு மற்றும் அவர்களது நிறுவனமான இண்டோஸ்பிரிட் குழுமம் ஆகியவற்றினை குறிக்கிற சவுத் குரூப்பின் பிரதிநிதி ஆவார்.

* டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழில் அதிபர் தினேஷ் அரோராவின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இவர் அப்ரூவர் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. புட்டி ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற மதுபான நிறுவனத்தின் இயக்குனர் அமித் அரோராவின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.


Next Story