குஜராத்தில் அமலாக்கத்துறை சோதனை: 2,000 ரூபாய் நோட்டுகளாக ரூ.1 கோடி சிக்கியது


குஜராத்தில் அமலாக்கத்துறை சோதனை: 2,000 ரூபாய் நோட்டுகளாக ரூ.1 கோடி சிக்கியது
x

கோப்புப்படம்

குஜராத் மற்றும் டாமனில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் 2,000 ரூபாய் நோட்டுகளாக ரூ.1 கோடி சிக்கியது.

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் ஜக்குபாய் படேல். இவரும், இவருடைய கூட்டாளிகள் கேதன் படேல், விபுல் படேல், மிட்டன் படேல் ஆகியோரும் 2018-ம் ஆண்டு டாமனில் நடந்த ஒரு இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளனர். அவர்கள் மீது டாமன் யூனியன் பிரதேசம், குஜராத்தின் வல்சாத், மும்பை ஆகிய ஊர்களில், கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, மதுபான கடத்தல் தொடர்பான 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவற்றில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக டாமன், குஜராத்தின் வல்சாத் ஆகிய இடங்களில் சுரேஷ் ஜக்குபாய் படேல் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு சொந்தமான 9 வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது.

வங்கி கணக்குகளில் ரூ.100 கோடி வரவு

அதில், ரூ.1 கோடியே 62 லட்சம் ரொக்கம் சிக்கியது. ரூ.1 கோடிக்கு மேற்பட்ட தொகை, 2,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. 2,000 ரூபாய் நோட்டுகள், செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

100-க்கு மேற்பட்ட சொத்துகளுக்கான ஆவணங்கள், பண பரிமாற்ற ஆவணங்கள், 3 வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.100 கோடி வரவு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றச்செயல்களில் கிடைத்த பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக, அவர்கள் போலியாக நிறுவனங்களை தொடங்கியதும் தெரிய வந்தது.

1 More update

Next Story