கோவாவில் இருந்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் மும்பை வந்த ஏக்நாத் ஷிண்டே


கோவாவில் இருந்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் மும்பை வந்த ஏக்நாத் ஷிண்டே
x

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கோவாவில் இருந்து மும்பை வந்து சேர்ந்துள்ளார்.



பனாஜி,



மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான மகா விகாஸ் அகாடியின் ஆட்சி நீடித்து வந்த நிலையில், சட்டசபை மேலவை தேர்தலுக்கு பின்பு, சிவசேனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஜூன் 20ந்தேதி இரவில், மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓரணியாக அசாம் மாநிலம் கவுகாத்திக்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்களுடன் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். அவர்களை திரும்ப வரும்படி சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் மற்றும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தனர்.

ஆனால், மகா விகாஸ் கூட்டணியில் இருந்து வெளியே வரும்படி ஷிண்டே டுவிட்டரில் பதிவிட்டார். இந்நிலையில், மராட்டியத்தில் ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜ.க. களத்தில் இறங்கியது. அக்கட்சியின் முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஜூன் 28ந்தேதி டெல்லிக்கு புறப்பட்டார். அவர் மாலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் விமானம் மூலம் மும்பை திரும்பிய தேவேந்திர பட்னாவிஸ் அன்றிரவு 9.30 மணியளவில் ராஜ்பவன் சென்றார். அவருடன் மாநில கட்சி தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உடன் இருந்தார். அப்போது, உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கவர்னரை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

அதன்பின்னர், மராட்டிய சபாநாயகர் கடந்த வியாழ கிழமை (30ந்தேதி) அவையை கூட்டி, வாக்கெடுப்பு நடத்தி, மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

இதற்காக, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு கோவாவுக்கு பயணம் மேற்கொண்டனர். கோவாவில், தாஜ் ரிசார்ட்டில் அவர்களுக்கு 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே கடந்த 29ந்தேதி இரவு ராஜினாமா செய்கிறேன் என கூறி பதவி விலகினார். அவர், எனது சொந்த மக்களே நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் என கூறிய தகவல் சாம்னா பத்திரிகையில் வெளிவந்தது. அவர் பதவி விலகிய சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவசியமில்லை என கவர்னர் கூறினார்.

இதன்பின்னர், அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. அதிக உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி என்றும் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்பார் என்றும் தகவல் வெளியானது. இதன்படி, ஷிண்டே முதல்-மந்திரியானார்.

மராட்டியத்தில் புதிய அரசு வருகிற திங்கட் கிழமையன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கோவாவில் இருந்து மும்பை வந்து சேர்ந்துள்ளார்.

சிவசேனாவில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைக்காக ஷிண்டேவை, அதன் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று நீக்கியுள்ளார். இந்த சூழலில், பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. ராகுல் நர்வேகரை சபாநாயகர் ஆக்கும் பணிகளில் அக்கட்சி மும்முரமுடன் ஈடுபட்டு வருகிறது.




Next Story