ஆட்டோ ஓட்டுநராக இருந்த ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனது எப்படி..? கடந்து வந்த பாதை


ஆட்டோ ஓட்டுநராக இருந்த ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனது எப்படி..? கடந்து வந்த பாதை
x

ஒருகாலத்தில் அவர் உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய வட்டத்தில் முக்கியமானவராக இருந்தார்.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்துவிட்டது. சிவசேனாவின் முக்கிய மந்திரிகளுள் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் கட்சியிலிருந்து பிரிந்து சென்றதால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு கவிழ்ந்தது.

ஏக்நாத் ஷிண்டே இன்று முதல்மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநராக இருந்த ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனது எப்படி..? கடந்து வந்த பாதை பற்றி சுவாரஸ்ய பின்னணி தகவல்களைப் பார்க்கலாம்.


ஒருகாலத்தில் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய வட்டத்தில் முக்கியமானவராக இருந்தார்.ஆனால், இப்போது பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் அவரது உறவு மிகவும் வலுவாக உள்ளது.

அவருடைய குடும்பம் வறுமையில் வாடியதையடுத்து, அவர் தன் இளமை காலத்தில் படிப்பை பாதியில் விட்டுவிட வேண்டியதாயிற்று. அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்தார். முன்னதாக, அவர் சில காலம், பீர் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் லாரி டிரைவராகவும் வேலை பார்த்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் முன்னணி தலைவராக திகழ்ந்த ஆனந்த் டிகே உடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் அவர் வாழ்க்கை அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது. அவரை முழுநேர சிவ சைனிக்(சிவசேனா தொண்டர்) ஆக ஆனந்த் டிகே வற்புறுத்தினார் மற்றும் ஊக்கப்படுத்தினார்.

சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேவால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, மாநிலம் முழுவதும் பல போராட்டங்களில் பங்கேற்றார். மராட்டிய-கர்நாடகா எல்லையில் நடந்த பெலகாவி போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அவர் 40 நாட்கள் சிறையில் இருந்தார்.


மும்பையை ஒட்டியுள்ள தானே நகரில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, அரசியலுக்கு வந்த பிறகு தானே-பால்கர் பகுதியில் வெகு சீக்கிரத்தில் ஒரு முக்கிய சிவசேனா தலைவராக உருவெடுத்தார். மேலும் பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளில் தனது தீவிரமான அணுகுமுறையால் பெயர் பெற்றவர்.

ஏக்நாத் ஷிண்டேவின் வாழ்க்கைக் குறிப்பை சுருக்கமாக பார்ப்போம்.

1964ம் ஆண்டு, ஏக்நாத ஷிண்டே மராட்டிய மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள ஜவாலி என்னும் ஊரில் பிறந்தார்.

1980-இல், பால் தாக்கரே கருத்துகளால் ஈர்க்கப்பட்டு சிவசேனாவில் இணைந்தார்.

1997-இல், சிவசேனா சார்பாக தானே மாநகராட்சிக்கு முதல் முறையாக மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-இல், தானே மாநகராட்சியின் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2002-இல், தானே மாநகராட்சிக்கு இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-இல், முதல் முறையாக மராட்டிய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

2005-இல், சிவசேனாவின் தானே மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். இக்கட்சியில் இப்படிப்பட்ட முக்கிய பதவியில் நியமிக்கப்பட்ட முதல் எம்.எல்.ஏ இவர் ஆவார்.

2000-இல், இரண்டாவது முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014-இல், 3வது முறையாக சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

அக்டோபர் 2014 - டிசம்பர் 2014,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.2014-2019,மராட்டிய மாநில அரசாங்கத்தில் பொதுப்பணித் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

2019-இல், சிவசேனா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். கூடுதல் பொறுப்பாக பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மந்திரியாக நியமிக்கப்பட்டார்

2019-இல், தொடர்ந்து நான்காவது முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சியில் மீண்டும் மந்திரியாக பதவியேற்றார்.

2019-இல், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். 28 நவம்பர் - 30 டிசம்பர் 2019 வரை உள்துறை மந்திரியாகவும் செயல்பட்டார்.

ஷிண்டே தற்போது மும்பையை ஒட்டியுள்ள தானே மாவட்டத்தின் கோப்ரி-பச்-பகாடி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அவர், 2004 முதல் தொடர்ந்து நான்கு முறை மராட்டிய சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஏக்நாத் ஷிண்டேவின் மகன், எலும்பியல் மருத்துவரான டாக்டர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, கல்யாண் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் ஷிண்டே முரண்பட்டார். பெரும்பான்மையான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் கொண்டுவந்த ஷிண்டே பா.ஜ.க துணையுடன் இன்று முதல்மந்திரியாக பொறுப்பேற்றார்.


Next Story