தேர்தல் அறிக்கை விவகாரம்: காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடிய பஜ்ரங் தள தொண்டர்கள்; பரபரப்பு வீடியோ


தேர்தல் அறிக்கை விவகாரம்: காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடிய பஜ்ரங் தள தொண்டர்கள்; பரபரப்பு வீடியோ
x

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விவகாரத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்திற்குள் பஜ்ரங் தள தொண்டர்கள் புகுந்து, சூறையாடி உள்ளனர்.

ஜபல்பூர்,

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றை தடை செய்வோம் என தெரிவித்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட அந்த அறிக்கையில், சட்டம் மற்றும் அரசியல் சாசனம் புனிதம் வாய்ந்தது என நாங்கள் நம்புகிறோம். அதனை தனி நபர்கள் அல்லது பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் பிற அமைப்புகள், பெரும்பான்மையினர் அல்லது சிறுபான்மையினர் இடையே பகைமையையோ அல்லது வெறுப்புணர்வையோ ஊக்குவித்து மீறுதல் கூடாது.

சாதி மற்றும் மத ரீதியாக சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வை பரப்ப கூடிய தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது காங்கிரஸ் கட்சியானது உறுதியான மற்றும் தீர்க்கம் வாய்ந்த முடிவை எடுக்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அதுபோன்ற எந்தவொரு அமைப்பின் மீதும் சட்டத்தின்படி, தடை விதிப்பது உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

இதுபற்றி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவரான சுரேந்திரா ஜெயின் கூறும்போது, பஜ்ரங் தள அமைப்பை, தேச விரோத மற்றும் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் காங்கிரஸ் கட்சி ஒப்பிட்டிருப்பது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது.

நாட்டு மக்கள் இதனை ஏற்கமாட்டார்கள். இந்த சவாலை பஜ்ரங்தளம் ஏற்கிறது. அனைத்து ஜனநாயக வழிகளிலும் இதற்கு நாங்கள் பதிலளிப்போம் என்று கூறினார். இந்த நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் நேற்று ஒன்று திரண்டனர்.

கட்சி அலுவலகத்திற்கு முன்பு தடுப்பான்களை அமைத்து பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். எனினும், அவர்களை தள்ளி விட்டு, விட்டு உள்ளே நுழைய முயற்சித்தனர்.

இதனால், பஜ்ரங் தள அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொண்டர்களில் சிலர் கொடியை பிடித்தபடி, கோஷங்களையும் எழுப்பினர். இதன்பின் அவர்களை தடுத்து, கைது செய்த போலீசார், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் ஒன்று அமைந்து உள்ளது. அதற்குள் பஜ்ரங் தள தொண்டர்கள் இன்று கும்பலாக புகுந்தனர். பஜ்ரங் தள பேனர் மற்றும் கொடிகளுடன் வந்த அவர்கள், பின்னர் அலுவலகத்திற்குள் புகுந்து, அதனை சூறையாடி உள்ளனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது.

இதுபற்றி மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.கே. மிஷ்ரா கூறும்போது, சூறையாடுதல், கொலை, வன்முறையில் ஈடுபடுதல் மற்றும் கர்பா நடனம் ஆடும் பெண்களின் அடையாளங்களை சோதனை செய்வது என எல்லாவற்றையும் பஜ்ரங் தள அமைப்பினர் செய்து வருகின்றனர்.

அதன்பின் முதல்-மந்திரி அவர்களை தேசியவாதிகள் என கூறுகிறார். அப்படி கூறி, இன்னும் 24 மணிநேரம் கூட ஆகவில்லை. அவரது தேசியவாதிகள் இதுபோன்று எல்லாம் செயல்படுவார்களா? என அவர் பதில் கூற வேண்டும்.

பஜ்ரங் தள அமைப்பினர் தேசியவாதிகள் என்றால், அனைத்து மந்திரிகளின் குழந்தைகளையும் பஜ்ரங் தள அமைப்பில் சேரும்படி முதல்-மந்திரி சுற்றறிக்கை ஒன்றை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story