'தேர்தல் பத்திரங்கள் ஒரு மோசடி திட்டம்; கட்சிகளை உடைக்க பயன்பட்டது' - ராகுல் காந்தி விமர்சனம்


தேர்தல் பத்திரங்கள் ஒரு மோசடி திட்டம்; கட்சிகளை உடைக்க பயன்பட்டது - ராகுல் காந்தி விமர்சனம்
x

Image Courtesy : @INCIndia

தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது சர்வதேச அளவிலான, மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மோசடி திட்டம் என ராகுல் காந்தி விமர்சித்தார்.

மும்பை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' நடத்தி வருகிறார். அவரது யாத்திரை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மராட்டிய மாநிலம் தானேவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது சர்வதேச அளவிலான, மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மோசடி திட்டமாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை ஆகிய அமைப்புகள் பின்தொடர்ந்து வரும்.

எதிர்க்கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும், அரசியல் கட்சிகளை உடைப்பதற்கும் இந்த திட்டம் பயன்பட்டது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக கட்சியில் இருந்து பிரிந்து சென்றார்கள் என்று நினைக்கிறீர்களா?

பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் மற்றும் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஏழைகள் மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர், ஆனால் அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர்மட்டத்தில் மிகக்குறைந்த பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் உயிரிழந்து கொண்டிருந்தபோது, தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' பிரதமர் மோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வடிவில் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் மட்டுமே விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஏழைகள் யாரும் அங்கு இல்லை. இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு கூட அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.


Next Story