கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகத்தில் 146 காட்டு யானைகள் உயிரிழப்பு


கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகத்தில் 146 காட்டு யானைகள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 146 காட்டு யானைகள் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 146 காட்டு யானைகள் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

காட்டு யானைகள்

கர்நாடகத்தில் சிக்கமகளூரு, ஹாசன், குடகு, சிவமொக்கா, உத்தர கன்னடா, சாம்ராஜ்நகர், ராமநகர், மைசூரு உள்ளிட்ட சில மாவட்டங்கள் மலைநாடு பகுதிகள் ஆகும். மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளன. இதனால் வனவிலங்குகள் குறிப்பாக காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. காட்டு யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

இதனால் காட்டு யானைகள் கிராமத்திற்குள் வராமல் தடுக்க ரெயில் தண்டவாளத்தை பயன்படுத்தி இரும்பு தடுப்பு கம்பி அமைப்பது, அகழிகளை வெட்டுவது உள்ளிட்ட பணிகளை வனத்துறையினரும் செய்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடகத்தில் காட்டு யானைகள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மாநிலத்தில் 6 ஆயிரத்து 49 காட்டு யானைகள் இருந்தன.

146 யானைகள் செத்தன

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகத்தில் 146 காட்டு யானைகள் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 2020-2021-ம் ஆண்டில் 67 காட்டு யானைகளும், 2021-2022-ம் ஆண்டில் 49 காட்டு யானைகளும், 2022-2023-ம் ஆண்டில் 30 யானைகளும் (அக்டோபர் மாதம் 25-ந் தேதி வரை) உயிரிழந்து உள்ளன. இதில் 31 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ளன. 2 யானைகள் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளன. 2 யானைகள் பஸ், ரெயில் மோதி செத்து உள்ளன.

மீதம் உள்ள 111 யானைகள் மர்மமான முறையில் செத்து உள்ளன. மர்மமான முறையில் யானைகள் செத்து போவதில் ஒடிசாவுக்கு அடுத்தபடியாக கர்நாடகம் உள்ளது.

இதுகுறித்து உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள காளி வனப்பகுதியில் ஊழியராக பணியாற்றும் இம்ரான் பட்டேல் என்பவர் கூறும்போது, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க ஒரே வழி ரெயில்வே தண்டவாளத்தால் தடுப்பு அமைப்பது தான். ஆனால் சில இடங்களில் அந்த தடுப்பு கம்பிக்குள் நுழைந்து ஊருக்குள் வர முயற்சிக்கும் யானைகள் தடுப்பு கம்பியில் சிக்கி செத்து விடுகின்றன. இது வேதனையாக இருந்தாலும் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டி உள்ளது என்றார்.

சட்டவிரோத மின்வேலி

செஸ்காம் நிர்வாக இயக்குனரான ஜெயவிபவ சாமி கூறும்போது, சில கிராமங்களில் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து விடுவதை தடுக்க விளைநிலங்களை சுற்றி விவசாயிகள் சட்டவிரோதமதாக மின்வேலிகள் அமைத்து உள்ளனர்.

இந்த மின்வேலியில் சிக்கியும் யானைகள் செத்து போகின்றன. சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.


Next Story