அவசர சட்ட விவகாரம்: உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து ஆதரவு கேட்க கெஜ்ரிவால் திட்டம்


அவசர சட்ட விவகாரம்:  உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து ஆதரவு கேட்க கெஜ்ரிவால் திட்டம்
x

அவசர சட்ட விவகாரத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாரை உள்பட ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க கெஜ்ரிவால் திட்டமிட்டு உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் ஐ.,ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகளை நியமிக்கிற, இடமாற்றம் செய்கிற அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் உண்டு என கடந்த 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனால் மத்திய அரசின் பிரதிநிதியாக திகழ்கிற துணை நிலை கவர்னரின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ள சூழலில், இந்த தீர்ப்பு, மத்திய அரசுக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்த நிலையில், இத்தீர்ப்பை செல்லாதது என ஆக்குகிற வகையில் அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாக தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தில், தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம், தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தவும், அதற்கு ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்றவும் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் எல்லா முடிவுகளையும், கூட்டத்தில் ஆஜராகிற பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தீர்மானிக்க வேண்டும். இதற்கு உறுப்பினர் செயலாளர் அங்கீகாரம் அளிக்க வேண்டும். அவசர சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தால், முதல்-மந்திரி தன் விருப்பப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மாறாக இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த அவசர சட்டம், மோசடி என்று முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சாடி உள்ளது. இதனால், மத்திய அரசின் பிரதிநிதியாக திகழ்கிற துணை நிலை கவர்னருக்கு மீண்டும் அதிகாரம் அளிப்பதற்கு இந்த அவசர சட்டம் வகை செய்கிறது.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நாளை மறுநாள் நான் நேரில் சந்திப்பேன். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, ஒவ்வொரு தலைவரையும் சந்தித்து, இந்த சட்ட மசோதாவை தோற்கடிக்க ஆதரவு கேட்பேன் என கூறியுள்ளார்.

இதன்படி, உத்தவ் தாக்கரேவை வருகிற 24-ந்தேதியும் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை 25-ந்தேதியும் மும்பையில் நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில், டெல்லியில் அதிகாரிகளை மாற்றும் விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள அவசர சட்டத்திற்கு எதிரான ஆதரவை அவர்களிடம் கேட்க இருக்கிறார்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், டெல்லியில் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் வைத்து, நேரில் இன்று சந்தித்து பேசினார். இதில் மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில், கெஜ்ரிவாலுக்கு தனது ஆதரவை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.


Next Story