போக்குவரத்து துறையில் வேலை புகார்கள்: புலன் விசாரணைக்கு 6 மாதம் அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் குற்றப்பிரிவு மனு


போக்குவரத்து துறையில் வேலை புகார்கள்: புலன் விசாரணைக்கு 6 மாதம் அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் குற்றப்பிரிவு மனு
x
தினத்தந்தி 14 July 2023 9:45 PM GMT (Updated: 14 July 2023 9:45 PM GMT)

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவது தொடர்பான புகார்கள் குறித்த வழக்கில் வழங்கப்பட்ட சம்மனை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

புதுடெல்லி,

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தரும் புகார்கள் மீதான புலன் விசாரணைக்கு 6 மாதம் அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவது தொடர்பான புகார்கள் குறித்த வழக்கில் வழங்கப்பட்ட சம்மனை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறையின் மேல்முறையீடு, மத்திய குற்றப்பிரிவுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களின் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கிருஷ்ண முராரி, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அதில், தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும், அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்கிறோம் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான புகார்கள், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி விசாரித்து, 2 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே 16-ந் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த அவகாசம் முடிவடைய உள்ள சூழலில் மத்திய குற்றப்பிரிவின் உதவி கமிஷனர் சுரேந்திரன் சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு 3 வழக்கு தொடர்பான சாட்சிகளுக்கு 318 நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவற்றில் 152 சாட்சிகள் ஆஜராகி வாக்குமூலங்களை பதிவு செய்திருக்கின்றனர். சாட்சிகளில் பெரும்பாலானவர்கள் குடியிருப்பு முகவரியை மாற்றி விட்டதால், அவர்களின் புதிய முகவரியை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்களின் குடியிருப்புகளில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி உள்ள மத்திய குற்றப்பிரிவு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன் விரிவான புலன்விசாரணை நடத்த வேண்டி உள்ளதையும் குறிப்பிட்டு, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் கோரியுள்ளது.


Next Story