காஷ்மீரில் என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை


காஷ்மீரில் என்கவுண்ட்டர்:  3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
x

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.



புல்வாமா,



ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப காலங்களாக இந்துக்கள், காஷ்மீரி பண்டிட்டுகள் உள்ளிட்டோர் மீது நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை முன்னிட்டு பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் திராப்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த என்கவுண்ட்டர் நேற்று மாலை 6.55 மணியளவில் தொடங்கியது. இதனை காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் தெரிவித்து இருந்தனர்.

கடந்த 11 மணி நேர தேடுதல் வேட்டை மற்றும் என்கவுண்ட்டருக்கு பின்னர், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்களான 3 பயங்கரவாதிகள் அதிரடியாக சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி. இன்று கூறும்போது, பயங்கரவாதிகள் 3 பேரும் உள்ளூரை சேர்ந்தவர்கள். இந்த என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவரின் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

கடந்த மே மாதம் 13ந்தேதி ரியாஸ் அகமது என்ற போலீஸ்காரர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் அவர் என தெரிய வந்துள்ளது.

அவர் ஜுனைத் ஷீர்காஜ்ரி என அடையாளம் காணப்பட்டு உள்ளார். மற்ற 2 பேரை அடையாளம் காணும் பணி மற்றும் எந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளிட்ட விவரங்களை உறுதிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.


Next Story